Sunday, October 30, 2011

கலியுகக் காதல்!

சிவப்பு மஞ்சள் பச்சையென்று
சிலிர்க்க வைக்கும் நிறங்களிலே
நிலைத்து நிற்கிறாய் கண்முன்னே -எப்பொழுதும்
நினைவில் நிற்கிறாய் ஏன் கண்ணே?
கண்ணைக் கவரும் அழகில்லை - அட!
கண்ணிமைக்க மறக்கிறேன் உனைக்கண்டே!!!
வாராய் என்று நன்கறிந்தும்
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்
உனக்காக என்றும் எனை மாற்றி
உள்ளம்தனில் காத்திருப்பின் இலக்கணம் கூறி!
படிக்கிறேன் பலவாறு தினம்தினமே
பகடைக்காயாய் சுழற்றும் உன்
மௌன உச்சரிப்புகளுக்கு உரு கொடுக்க,
மெல்ல மெல்ல உயிர் கொடுக்க!
பசியும் தூக்கமும் பிறிதாயிற்றே!
பாசமும் நட்பும் வேறாயிற்றே!
இது போல் இல்லை நான் முன்னே
இனி இன்பமும் துன்பமும் நீயானாய்!

காதல் போலத் தோற்றுகிறதோ??? - ஆம்!
கலியுகக் காதல் இதன் பெயராம்!
மென்பொருள் துறையில் முக்கியமாய்
மனிதனை இயந்திரம் ஆ(க்கி)ட்கொள்ளும்
கணிப்பொறிக் காதல் -  இஃது
காலம் காலமாய் ஒருதலையாக!!!


Tuesday, September 13, 2011

இன்றையநிலையில் நான்...

வெட்கித் தலைக்குனிவேனென்று 
விருப்பமில்லாவொன்றில்
விருட்டென்று விரைந்த நான் 
விடியல் பொழுது ஒவ்வொன்றிலும் 
விழிப்புணர்வு கொண்டு விசும்புகிறேன்...
வெறுப்புகளின் பிடியில் விருப்புகளைத் தேடி..!
மாறிப்போன என்னிலும் 
மரத்துப்போன மனத்திலும் 
உருமாறிப்போன என்...
விருப்பங்களே!!!
மன்னித்துவிடுங்கள்...!
துறவியாகிவிட்டேன் நான்!!!


Saturday, September 3, 2011

பாரியோ நீ மாரியே....!

முதல் துளி விழுந்ததும்
மூலை முடுக்குகளில் சிலர்...
மேலும் தொடர்கிறாய் விடாமல்
மல்கிய குரலோடு உன் அழுகையை...
ஊர்வலம் போகிறது ஆங்கே
உன்னை எதிர்த்து கறுப்புக் கொடி ஏந்தி!
யாருடைய ஆறுதலுக்காக
யாசித்து நிற்கிறாய் என்று புரியவில்லை!

காற்றும் மேகமும் உறுதுணையாய்க்
காவந்து செய்து உன் துயர் நீக்கப் பாடுபட,
நீட்டிக்கிறாய் உன் பிடிவாதத்தை...
நீயும் மனிதனைப் போல் தானோ?
உன் கண்ணீரில் காலம் காலமாய்
உல்லாசமாய் உள்ளம் நனைக்கும்
வேண்டாத உறவுக்கும், தேறாத அன்புக்கும்
தேடித் தேடி அலைகிறாய் ஏனோ?


Tuesday, July 26, 2011

காதல் தோல்வி!



காண விழைந்து ஓடோடி வந்தேன்
காலணி கூட அணியாமல்!
காத்திருக்கிறாய் எனக்கோ என்று!!!

என்னைக் காண ஒருபோதும் நீ
என் இருப்பிடம் தேடி வராமலிருந்தும்
கோபமில்லை உன்மேல் எனக்கு!!!

திரண்டு வந்து மெதுவாய்
திருடிச் சென்றாய் என்மனதை
திருப்பிக் கேட்கவும் மனமில்லை எனக்கு!!!

தீண்டிச் செல்லும் ஒவ்வொரு முறையும்
துள்ளிக் குதித்தேன் குதூகலத்தில்
என்னை மட்டும் தொடர்கிறாய் என்று!!!

சுவடுகள் பதித்துத் திரும்பிப் பார்த்தேன்
சுறுசுறுப்பாய்ப் பின்தொடர்ந்தாய்!
நான் என்றால் அவ்வளவு ஆசையா உனக்கு???

உன்னில் கலந்து உவகையில் மிதக்கயில்
உணர்ந்தேன் தற்செயலாய் அப்பொழுது
ஓராயிரம் காதலர்களா உனக்கு??? 

Monday, July 25, 2011

நன்றிகள் கோடி!!!

மறக்கவும் இல்லை - எதனையும்
மறைக்கவும் இல்லை!
ஏனென்று தெரியவில்லை
என் வார்த்தைகளும் கைவசம் இல்லை!
எண்ணி எண்ணி வியக்கிறேன்
எனகென்ன நேர்ந்ததென்று!
மற்றதெல்லாம் பிதற்றும் என்வாய்
மாதா பிதா எனில் மௌனமொழி பேசுகிறது!
தவறேதும் இல்லை என்மேல்
தவிர்க்க முடியாத உண்மை இதோ!
இன்று என்னுள் எல்லாமாய் எங்கும் நீவீரிருக்க - இருக்க  
இடமின்றி வார்த்தைகள் இறந்துவிட்டன போலும்!!!
இருப்பினும் உயிர்ப்பித்திருக்கிறேன் - என்
இனிய தமிழ்த்தாயைக் கொண்டு 
இக்கவிதையை !!! - உங்களுக்காக இதோ என் 
இருபத்தைந்தாம் படைப்பு சமர்ப்பணம்!!!
அரியதொரு பிறவியில்லை எனினும்
அறிய வைத்திருக்கிறீர்கள் என்னையும்
இப்பூவுலகில் சிலருக்கு!! நன்றி!!!
இன்னல்களிலும் இன்பமென்று
இருசுவை காண வைத்தீர் - வியந்தேன்!
இன்றும் தொடருகிறேன் அப்பணியை
நிலையில்லா இவ்வாழ்வில் நீக்கமற
நிலைத்திருக்கும் நினைவுகளில்!
வேண்டி நிற்கிறேன் எப்பிறப்பினிலும்
வேறொருவர் வேண்டாமென்று!
தேவைகளற்ற உங்களுக்கு 
தேகத்தால் என்றும் சேவை செய்யக் 
காத்திருப்பேன் காலம் காலமாய்- இக்
கருத்திலொன்றும் மாற்றமில்லை!!!

Friday, July 22, 2011

திருமண மலர்கள்!

சொல்லாமல் வந்த திசையிலே
சொல்லித் தந்த வார்த்தைகளை
செவி கொடுத்துத்தான் கேட்டேனே
செல்லும் இடமெல்லாம் செல்லமாய்...

அருகிலென்றாலும் உன்னைவிட்டு
அகல என்றும் நினைத்ததில்லை....
அந்நாள் இந்நாள் என்று இன்று என்  
அகம் கூற உணர்கிறேன்...

என்னைக் காக்கும் முயற்சியில்
என்றென்றும் நீயிருக்க,
எதிர்ப்பார்ப்புகளோடு எதிர்ப்பாராவிதமாய்
எடுத்துச் செல்கிறார்கள் என்னை!

நியதி இதுவென்று நினைத்தாலும்
நியாயம் தானா சொல்லிவிடு?
நீடூழி வாழ்க என்றாலும் - உன் 
நினைவுகளின்றி வாழ்வதெங்கே??
வாடுகிறேன்!!!!

Saturday, June 25, 2011

கால் கிலோ கல்வி !!!

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்"

ஒரு தாயானவள் ( தந்தையும் கூட! ) தன் மகன் அறிவிற் சிறந்து, நற்குணங்கள் ததும்பப் பெற்று ஊரார் புகழும்படியாக இருக்கிறான் எனும்போது,அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சி அடைகிறாள் என்பது இத்திருக்குறளின் விளக்கம். இப்படி ஒரு புறம் இருக்க, இக்கால நடைமுறைக்கேற்ப குறளை மாற்றி அமைக்கலாம் எனவும் தோற்றுகின்றது.

"ஈன்ற பொழுதிற் துவங்கி காசிறைப்பாய்உன்மகனை
சான்றோன் எனக்கேட்கத் தான்"

குழந்தை பிறந்தது முதல் காசை வாரி இறைக்கத் தொடங்கிவிட்டால் போதும், அதனைப் பிற்காலத்தில் சான்றோனாக்கிப் பார்த்திட இயலும். இதில் சான்றோன் எனும் சொல்லை (கல்விச்) சான்றிதழ் + உடையோன் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்!
             
தமிழ்நாட்டில், அதிலும் சென்னையில் மட்டும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இவற்றைப் "பள்ளிக்கூட்டங்கள்"
எனச் சொல்வதிலும் தவறில்லை. "கல்விக்கண் திறந்த காமராசர்" போன்ற பலரின் முயற்சியால் மதிய உணவுத் திட்டங்களோடு கூடி, இலவசக் கல்வி தரப்பட்டு, கல்வித் தரம் உயர்த்தப்பட்டு கல்வி இன்றியமையாததாக உலா வந்தது அக்காலம். இப்போதும் கல்விக்கூடங்களுக்குக் குறைபாடில்லை. விளைவு, கோயம்பேடு சந்தையில் காய்கறிகளையும் பழங்களையும் கூர் போட்டு விற்பதைப் போன்று கல்வியையும் கூவிக் கூவி விற்கும் நிலைமை வந்துவிட்டது. இதற்கான விலை அட்டவணை பள்ளியைப் பொறுத்து மாறுபடுகிறது.
எல்.கே.ஜி. - ரூ. 1,750 முதல் - ரூ. 24,000 வரை
12 - ஆம் வகுப்பு - ரூ. 7,750 முதல் - ரூ. 23,350 வரை
இது அரசுப் பள்ளிகள் அல்லாமல் தனியார் பள்ளிகளின் நிலை. இப்படி கல்விக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டும் இதற்கு மேல் வசூலிக்கும் பள்ளிகளும் இதில் அடக்கம். இப்படியிருக்க, தனியார் பள்ளிகளுக்கு, தான் நிர்ணயிக்கும் தொகையை, அரசு தானே வசூலித்து அப்பள்ளிகளிடம் ஒப்படைக்கலாமே!
கல்வி வியாபாரமாகி வருவதற்கு முக்கியக் காரணம் மக்களாகிய நாமே! சற்று சிந்தித்துப் பார்ப்போம் ... எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஆரம்பத்தில் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவது தான் என்ன? அதே எண்சுவடியும், அ, ஆ, இ, ஈ யும், a, b, c, d யும் தான். ஆனால் இதற்காக மாறுபடும் விலை அட்டவணையைப் பாருங்கள்! “standard” எனப்படும் “தரம்” தான் இதற்குக் காரணம் என்று பொதுவாக மக்களிடையே கருத்து நிலவுகிறது. இது ஒரு வகையில் உண்மை எனக் கொண்டாலும், இது மட்டுமே உண்மை எனக் கொள்ள முடியாது.  "infrastructure" என்று சொல்லப்படும் "அடிப்படைக் கட்டுமான வசதிகள்" இத்தகைய பள்ளிகளில் பெரும்பான்மையில் நன்றாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இதில் சேர்க்க விரும்புகின்றனர் என்றும் சொல்லலாம். இவர்கள் கனவுகளுக்கும் கணிப்புகளுக்கும் ஏற்றவாறு அப்பள்ளிகள் இருக்கின்றனவா என்பது ஒரு சில இடங்களில் கேள்விக்குறியே!
சில பள்ளிகளில் மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் அடுத்த நிலைக்குத் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியின் தரக் குறைவுக்கு இதுவும் பங்கு சேர்க்கின்றது. மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆசிரியர்கள் பலர் இருந்தும், இதுபோன்ற ஒரு சில ஆசிரியர்களால் கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே கருதப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. தற்பொழுது "சமச்சீர் கல்வி " என்னும் பெயரில் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மாணவர்களின் அறிவைக் கூர்மையாக்கும் விதமாக எவ்வெவற்றைச் சேர்க்க வேண்டும் என்பதும், எத்தகைய பாடத்திட்டம் அமைய வேண்டும் என்பதும் போக, பள்ளிகளின் தரத்தையும் சற்று ஆராய்ந்தால் நன்மை விளையும் என்பது ஒரு சாராரின் கருத்து. பத்தாம் வகுப்பு வரை எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மக்களுக்கு, தம் பிள்ளைகளைப் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கும் பொழுதுதான் பீதி கிளம்புகிறது. தரமான பள்ளியின் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள், தனிப்பயிற்சி நிலையங்கள் என்று எண்ணிலடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றது இவர்களின் தேவை. அட! தேவைக்கேற்ற பள்ளி தான் கிட்டியாயிற்றே? இன்னும் என்ன? என்று மனம் நினைத்தாலும், புற உலகின் உந்துதலால் கையிலடங்காமல் செலவாகத் துடிக்கும் பணம். இதில் பெரும்பாலும் அவதிப்படுவோர் மாணவர்கள் மட்டுமே!
பொறியியல் படிப்பும் மருத்துவப் படிப்பும் ஒவ்வொரு புறம் கையசைத்து நிற்க இரண்டு வருடம் அல்லும் பகலும் ஆசையை அடையப் போராட்டம்!!! இதற்கு வணிகவியல் தொடர்பான படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் விதிவிலக்கு! இதனைத் தொடரும் CA, CS, CWA, B.COM போன்ற படிப்புகள் பலருக்குக் கண்ணிலே தெரிவதே இல்லை. பணம் நிறைய செலவழித்துப் படித்தால் தான் படிப்பு என்று இப்படிப்புகளை ஏளனமாகப் பார்த்துப் பழகிவிட்டார்கள் போலும்! உண்மையில் சொல்லப் போனால், இப்பொழுது இத்தகு படிப்புகளில் மட்டுமே கல்வியின் உயிரோட்டம் காணப்படுகிறது. மேலும் எப்படியோ.... தெரியவில்லை!
நாம் மீண்டும் அறிவியல் சார்ந்து வருவோம்!!! இப்படி பிள்ளைகள் படித்தும், பாதி நேரம் பயத்தில் உழலுவதே பெற்றோர் மனநிலை. அடுத்த கட்டமாக, அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள்; இதில் சிலர் நுழைவுத் தேர்வுகளுக்காக தங்களைப் பத்து அல்லது ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஆயத்தப் படுத்திக் கொள்கிறார்கள். இவ்வனைத்தையும் அசைத்துப் பார்க்க வருகிறது தேர்வு முடிவுகள். முட்டி மோதி முண்டியடித்து 200 -க்கு 199 , 198  என வாங்கினாலும் போதுவதில்லை. இதற்கிடையில், இறுதித் தேர்வுக்குப் பின்னர், ஆனால் தேர்வு முடிவுகளுக்கு முன்னர் என்று பதம் பார்க்கத் தொடங்குகின்றன தனியார் கல்லூரிகள்.... பேரம் பேச ஆரம்பிக்கின்றனர்: "Mechanical Engineering " 18 லட்சம் ,"EEE" 16 லட்சம் என்று! ஐயோ... பிள்ளை இவ்வளவு உழைத்தும் எதிர்ப்பார்த்த கல்லூரியில், எதிர்ப்பார்த்த படிப்பு கிடைக்கவில்லை என்றால் என்செய்வது? கூரையைப் பிய்த்துக் கொண்டு போகின்றது பணம்- தனியார் கல்லூரிகளின் காலடியில், அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு! இது ஒரு புறம்.
கலந்தாய்வுக்காகக் காத்திருக்கும் கனவான்கள் மறுபுறம். பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி ஒதுக்கப்படும் இடங்களினால் "பிற்படுத்தப்படுவோர்" பற்றி அரசும் இதுவரையில் கண்டுகொண்டதாக இல்லை!!! இதில் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் "OC " எனப்படும் "open category" பிரிவினரே! "middle class" என்று பெரும்பான்மையாகக் காணப்படும் இத்தகைய நடுத்தரவர்கத்தினர் அடையும் அல்லல்களுக்கு அளவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் "மதில் மேல் பூனை கதை". எதற்கும் கையாலாகாத நிலை!
இது பொறியியல் படிப்பின் நிலை. பின் வருகிறது மருத்துவப் படிப்பு. எடுத்த எடுப்பில் 45 லட்சம் என,ஒரே வாயில் ஏப்பம் விட! அட.... அசருவதில்லை நம் மக்கள். தட்டுமுட்டு சாமான்களை விற்று அல்லது தலையை அடகு வைத்தாவது உள்புகுந்துவிடுகிரார்கள். எல்லாம் "சான்றோன்" படுத்தும் பாடு. இவை அனைத்தும் அரசுக்குத் தெரிந்திருந்தும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. "தனியார் கல்லூரிகளின்அதிகக் கட்டண வசூல் விவரங்கள் பற்றி உரிய ஆவணங்கள் , ஆதாரத்தோடு இருந்தால் மக்கள் முறையிடலாம் ! அதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்", என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார் என்று நாளேட்டில் செய்திகள் மட்டும் தவறாது வெளியாகும். யார் முறையிடப் போகிறார்கள் என்று அவர்கள் கருதுவதும் சரிதானே? நமக்கேன் வீண்வம்பு என்று இருப்பவர்கள் தானே நாம்!!! கல்விக்கடன், நகைக்கடன் என்று பலவகையில் திணறினாலும் அரசின் தவற்றைத் தட்டிக் கேட்க மனம் வராத தியாகிகள் நாம்!
இதோ, இன்னும் பணத்தின் பயணம் ஓயவில்லை. நான்கு அல்லது ஐந்தாண்டு உள்நாட்டு பட்டப்படிப்பிற்குப் பிறகும், வெறிக்க வைக்கும் வெளிநாட்டு மேற்படிப்பு. இருக்கும் உடைமைகள் அனைத்தையும் காட்டித் தயாராகிறது ஆவணங்கள்....மேலும் 35 லட்சத்திற்கும் மேல் பணம் பறக்கின்றது. நீண்ட பெருமூச்சுடன் நிமிர நினைக்கும் நிலையில், திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் கண்ணைக் கட்டுகிறது. ஊழல் மிகுந்த சமுதாயம் என்று கோஷமிட்டுப் பயனில்லை. பிறகென்ன, இத்தனை வருடங்களாகக் கொட்டியிறைத்த பணத்தை எப்படி மீட்பது ??? இது நாள் வரை உருவாக்கிய மருத்துவர்களும் பொறியியலாளர்களும் தங்கள் கைவரிசையைக் காட்டத் துவங்குகின்றனர். தாங்கள் மக்களிடம் கறக்கும் பணத்திற்கு அவர்கள் தரும் பதில்.... அதே "தரம்" (standard) மற்றும் " அடிப்படைக் கட்டுமான வசதிகள்" (infrastructure)!!! சிறு வயதிலிருந்தே கற்பிக்கப் பட்டுள்ளதல்லவா...பசுமரத்தாணிபோல பதிந்து கிடக்கிறது நெஞ்சில்!
இதே நிலையில் சென்று கொண்டிருந்தால் "கல்வி" என்பது ஒரு நாளில் எட்டாக் கனியாகும் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. இத்தகைய நிலவரம் மேலும் தொடராமல் முளையிலேயே கிள்ளி விட மக்களாகிய நமக்கு முழு உரிமை உண்டு. ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு! ஒன்று திரண்டால் உண்டு முடிவு! சிந்திப்பீர்!!! செயல்படுவீர்!!!

Saturday, June 18, 2011

விடைபெற...

சிக்கித் தவிக்கிறேன் அனுதினமும்- பள்ளிச்
சீருடை அணியும் இவ்வயதில்.................!
பயில்கிறேன் நானோ பல விதமாய்
பணத்தின் பிடிதான் உயர்ந்ததென்று!
ஏழ்மை நிலை எனை வாட்ட,
ஏங்கிப் பார்க்கிறேன் கனவுகளில் கல்வியை!!
தேவைகளும் ஆசைகளும் எதிரெதிரே வீற்றிருக்க;
தேங்கிக் கிடக்கும் கவலையிலும்
ததும்ப நிற்கும் கண்ணீரிலும்
திக்கு தெரியாமல் தேடுகிறேன்...
தீவிரமாகத்தான் ... கல்வியை இல்லை...
தினக்கூலிக்கு "ஆள் தேவை" என்ற பலகையை!
சுமை தூக்கித் தருகிறேன்...பணம் வேண்டாம்
சற்று என் மனச் சுமை இறக்கித் தருவீரோ???

Monday, June 13, 2011

அந்த என் நாட்கள்...

கண்ணயர்ந்து சாய்கிறேன் - இன்று  
கடும்பணியின் பிடிப்பின் இடையில்!
எதற்காக இவ்வாறு.......???????
எனக்குள் எழுந்த கேள்விக்கு 
ஒரு பொருட் பன்மொழியாய் 
ஓராயிரம் வார்த்தைகள்!!!
திரும்பிப் பார்க்கிறேன் இப்போது
திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்...
சிட்டாய்த் திரிந்து, சிரித்து மகிழ்ந்த நாட்கள் என 
சுட்டுகிறது என் கைவிரல் அவற்றை!
சுமைகள் இவை, சுவைகள் இவை என
சூட்சமமாய்க் காலம் காட்டி எதிர் நிற்க 
நினைவு கூர்ந்து நகைக்கிறேன் - ஒரு கணம் 
நில்லாமல் ஓடிய அந்நாட்களை!!!
அதெல்லாம் ஒரு காலம் - என்று
அகத்தால் உரைக்க இதோ, என் முன்னரும்
அரியவகை அனுபவங்கள் அணிவகுப்பில்!!!
ஆழ்ந்த பெருமூச்சுடன் ............
ஒட்டிப் பார்க்க முயல்கிறேன் 
ஓட்டம் பிடித்த "அந்த என் நாட்களை" !!! 


Saturday, May 28, 2011

தமிழ்த் திருட்டு!

அதிகார தோரணையில் பொற் சிலம்பும்,
அலங்கார மணிகளோடு மேகலையும்,
அளவிலா மதிப்புடைய சிந்தாமணியும்,
அடுக்கிய வண்ண வளையல்களும்,
அழகாய் அசைந்தாடும் குண்டலமும்,
அன்று அணிந்து அன்ன நடையிட்ட வீதியிலே
ஆளையே காணோம் இன்று???
அட! விலைவாசி உயர்வால் உன்னையும்
ஆட்கொண்டுவிட்டதோ கள்வர் பயம்?
அன்றி அண்டை நாட்டைப் பார்த்து
அலைகிறாயோ நீயும் கலாச்சார மாற்றத்திற்கு?
அடிக்கடி கண்டு தான் வருகிறேன் உன் போக்கை!
ஆதி முதல் அந்தம் வரையிலாக!
ஆதிக்கத்தின் ஆழம் கண்டுகொள்ளும் முயற்சியில்
அண்மையில் தந்துள்ளேன் புகார்- நகரிலே
அடக்கவேண்டி இத்தமிழ்த் திருட்டை!!!
அன்பான இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அகப்பட்டால் இதனை ஒப்படையுங்கள் 
அதன் இருப்பிடத்திற்கு! - அகந்தையால் 
அநாதையாக்கி ஒதுக்கி விடாதீர்கள் இதனை ஒருகாலும்!!!

Wednesday, May 25, 2011

புதிய பார்வை!

தொலைத்துவிட்ட வழியதுவோ 
தொங்கி அலைந்து நான் கேட்க
மறுத்து விலகிய பல்லோரிருக்க 
மனிதன் ஒருவனைக் கண்டேன் நான்!
பாதை காட்டிய பணிவுள்ளம்
பகர்ந்த மொழி ஒவ்வொன்றும்
நேரில் கண்டு நெகிழ்ந்தாற்போல் 
நேர்த்தியாய் எனக்கு தென்பட்டது! 
இருக்கும் இடம் அனைத்தையுமே 
இடைவெளி விட்டு அடியடியாய் 
அழகுடன் அதனை வருணிக்க 
ஆழ்ந்து போனேன் அதிசயத்தில்!

தற்காலிக சந்திப்பால்
தகவல் பரிமாற்றமும் நடைபெறவே,
கேட்டேன் நானும் அவரிடமே 
கவிஞரோ நீரென்று???
மறுமொழியதுவோ கூறாமலே 
மௌனச் சிரிப்பை உதிர்த்திட்டார்!
நன்றி கூறி நகைத்திட்டு
நடையைக்கட்ட முற்பட்டேன்!
ஏதோ ஒன்று எனைத் தடுக்க 
ஏனோ அவரைத் திரும்பிப் பார்த்தேன்!
அடிமேல் அடியை அளந்திட்டு 
அவ்வப்போது  தட்டிப் பார்த்து,

உணர்ந்து நகர்ந்து கடக்கயிலே 
உள்ள சாலையின் அழகை 
செவிமடுத்து தத்திச்
செல்லும் திறனுடையார்,
என்ற உண்மை விளங்கிடவே 
என் அகக்கண் அழுது புலம்பியதே!
விழியின்றி வழியவரோ கண்டு 
வீர நடையிட , நாமோ வாழ்வில் 
வெகு பல பொருட்கள் பெற்றிருந்தும்
விரைந்து உதவிட மறுக்கின்றோம்,
என்பதங்கே புலனாக- சிந்தையில் 
எட்டிய முடிவும் வென்றதங்கே!

இருக்கும் வரை முடியாதெனினும் 
இறந்த பின்னர் செய்யலாமே!
காணும் விழிகள் இரண்டினால் 
காரிருள் அழித்திடுவோம் உலகினிலே!
கண் தானம் செய்வோம் இப்பிறப்பில் 
கவின் ஞாலமதனில்
காலம் காலமாய்க் 
களிப்புடன் என்றும் வாழ்வோம்!!

Tuesday, April 26, 2011

விடியலை நோக்கி...!

               "அலைபாயும் எண்ணங்களுக்கிடையில் அவ்வப்பொழுது "நான் யார்?" என்ற கேள்விக்கு பதில் தெரியாமல், விடைத்தாளின் பக்கங்களை நிரப்ப மாணவன் மேற்கொள்ளும் முறையைப் போல....இதோ! குவிந்து கிடக்கின்றன என் முன் பல விதமான.... பற்பல விடைகள்... என்னை எனக்கே அறிமுகப்படுத்திக் கொண்டு!!! இருந்தும் ஒப்புக் கொள்ள மறுக்கின்றது என் சுயமாகிய, "நான்"... புறக்கணிக்கத் தொடங்குகிறது.... ஒரு புரட்சியாளனாக! ஒரு சமூக ஆர்வலனாக! இல்லை...இல்லை... முதலில் ஒரு சராசரி மனிதனாக...! ஆம்! என்னை யாரென்று கண்டுகொள்ள முடியாத வகையில் நான் செய்துவரும் செயலனைத்தும் மனத்தின் வாயிலாக, மர்மமான முறையில் ஏளனப் பேச்சு பேசி என்னை எள்ளி நகையாடுகிறது. ஒருவேளை, வெளிப்பார்வையின் மொத்த பரிணாமங்களின் கூட்டமைப்பே நானோ? இருக்காது....! அப்படியென்றால் எனக்குள் இருக்கும் தனித்துவம் தான் என்ன? யோசிக்கிறேன்...ஏய் ...நீ இன்ன பதவியில் இன்ன இடத்தில்  இருப்பவன் தானே?... அவ்வாறாக மற்றவர்கள் அல்லவோ என்னை அழைக்கிறார்கள்? சரி, நீ இன்னாருடைய புதல்வன்/புதல்வி ... இதிலென்ன தெரிகிறது என் தனித்தன்மை? பொருளின் இருப்பளவைக் கொண்டு சொல்லலாமோ? இதற்கு மட்டும் என்ன... தனிப்பெருந்தகைமையா இருந்துவிடப்  போகிறது? "நான் கடவுள்???".... மனிதர்கள் அனைவரும் கடவுளாகிவிட்டால்... கலக்கம் ஏதங்கே நாட்டில்? பகுத்தறிதலின் பொருட்டு பகுக்க இயலாத பரந்தாமனைப் பங்கு போட முயற்சியோ? உணர்தலின் பொருட்டு கடவுள் "உடன்" இருப்பாரன்றி, "உள்" இருப்பாரல்லர்! பிறகு....வேறென்ன தேவை, என்னை "நானாக" உருப்பெறவைக்க?
             இருபதில் இருக்கும் எனக்கு, என்னுள் இருப்பது என்னவென்று அறிய வழியதுவோ யாண்டுமே புலப்படக் காணோம்! பின், நான் என்ன தான் சாதித்திருக்கிறேன் இத்துனை வருடங்களாக? பெற்றோர்கள் மீது பழியைப் போட்டுத் தப்ப முடியுமா என் மனசாட்சியால்? ஒரு காலமும் அது நடக்க வாய்ப்பில்லை. நான் பூமியில் பிறந்தது முதல், என் ஒவ்வொரு அசைவினிலும் ஆனந்தம் காண்பவர்களாயிற்றே அவர்கள்! பிஞ்சுக் கரங்களைப் பற்றி நடக்கப் பழக்கியும், மழலைச் சொல் மணத்தில் மயங்கியும், உரிமையாய் அரற்றுவதில் அகமகிழ்ந்தும், என்னுடைய ஒவ்வொரு அசைவிற்கும் புதுப்புது அர்த்தங்களைத் தோற்றுவித்துக் கொண்டு, இன்னும் என் பின்னால் அவர்கள்!! 
             ஒரு சராசரி மனிதனாக என்னிடம் நான் எதிர்ப்பார்க்கக் கூடியது தான் என்ன? தேடிப் பெற்ற பதில்களின் பட்டியல்... இதோ! 
* சொல் பேச்சு கேட்கும் பிள்ளையாக,
* சுயநலமற்ற பிறவியாக,
* பிறர் நலம் காக்கும் ஆத்மாவாக,
* அன்பு, பாசம் முதலியவற்றின் வெளிப்பாடாக,
*  நற்குணங்களின் கூட்டமைப்பாக,
இருக்க, சாதிக்க நினைக்கும் என்னுள் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் மெல்ல வெளிவரத் தொடங்குகின்றன ஆசைகளாக!!!
              ஆம்! கண்டுகொண்டேன்... ஆசைகளற்ற மனிதன் உண்டோ உலகில்? இதனால், தேடி அலைகிறேன் இன்றும், இன்பத்தின் வாயில்கள் எங்கென்று, கண்முன் எப்போதும் அவை திறந்திருந்தும்!! கற்பிக்க நினைக்கிறேன் நான் ஏதும் கற்றுக் கொள்ளாமல்! வாழ நினைக்கிறேன் வாழும் முறையறியாமல்! தற்போதைய மகிழ்ச்சிக்காகத் ததும்பி நிற்கும் என் திறமைகளுக்குத் திறையிடுகின்றேன்! உணர்ச்சியற்ற நிலையை உணர்கிறேன்! செயலாக்கம் பெறத் துடிக்கிறேன்.... வெறும் மனதளவில்!! சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்...."
            இவ்வாறெல்லாம் தோன்றுவது எப்பொழுது? மனிதன் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் ஏதேனும் ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். பொருள் உள்ளவனுக்கு அதனைப் பாதுகாப்பதைப் பற்றிய சிந்தனை! பொருளற்றவனுக்கோ அடுத்த வேளையைப் பற்றிய சிந்தனை! தன்னைச் சூழ்ந்து இருக்கும் இன்பங்களை விடுத்து, மனநிறைவைப் பெற, பற்பல வகையில் அலைந்து திரியும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றது என்பதும்  குறிப்பிடத்தக்கது. இயந்திரமயமாகிவரும் இவ்வுலகில் நாம் அனைவரும் மேலே குறிப்பிட்டுள்ள நிலையை அடைவதென்பது தொலைவில் இல்லை.
           விடியற் காலையின் வியப்புறும் அழகோடு, சேவல் கூவி; பொழுது புலர்ந்து, வாசலில் பூக்கோலமிட்டு, கடவுளைத் தொழுது, விறகடுப்பில் உணவு சமைத்து, சுறுசுறுப்புடன் அனைத்து வேலைகளையும் முடித்து, அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் நலம் விசாரித்து, பகைமை பாராட்டாமல் பாரம்பரியம் காத்த நம் முன்னோர்கள் எங்கே? காலைப் பொழுதைக் கண்ணாலும் பார்த்திராத, கைப்பேசியின் சிணுங்கலில் சிற்றுண்டியையும், இணைய தளங்கள் மற்றும் வலைப்பூவின் வாயிலாக உடனிருப்பவருடனே அளவளாவி, இதற்கிடையே தப்பித் தவறி கண்கள் உலகத்தின் இயற்கை இயக்கத்தைக் கண்டுவிட்டால் அதனை ஒரு அபூர்வ அதிசயமாகக் கண்டு பூரிப்பில் ஆழ்ந்து, உறவுகளைத் தொலைத்து, உலக மாயையில் சிக்கி, முப்பதிலேயே முற்றுமிழந்து உவகைத் தேனைத் தேடி அலைந்து, ஆங்காங்கே காணப்படும் மன வளர்ச்சிக் கூடங்களிலும், ஆன்மீக போதனைப் பீடங்களிலும், மருத்துவமனையின் வாயிலிலும் தன்னையே தேடிடும் இக்கால மாந்தரின் நிலை எங்கே?
             சிறியதொரு வாழ்க்கை! இதில் பணத்தின் பிடியில் பகடைக்காயாய்ச் சுழன்று திரிகிறோம். உணர்ந்து கொள்ள வேண்டியது ஒன்றே! வாழ்வில்  நன்மையோ தீமையோ, பிறர் தர வருவதில்லை. நாம் இழைக்கும் செயல்களே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. எந்த நிலையில் நாம் நம் வாழ்வைத் திரும்பிப் பார்த்தாலும் அங்கே நம்மை அடையாளம் காட்டிக் கொண்டு, "நான் யார்?" என்று அறிவுறுத்துவது நாம் அகமகிழ்ந்து பிறருக்குச் செய்த உதவி மட்டுமே! இருக்கும் வரையில் இருப்பவருடன் இணைந்து இன்புற்று வாழ்ந்தால் இடுக்கண் ஏது? "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றான பின், "நான்" என்பது மறைந்து, "நாமாகிப்" போகுமன்றோ???

Tuesday, April 5, 2011

உனக்கும் தான் !!!


சிதறிப் போன சமுதாயத்தைப் பார்க்கிறாயோ?
சிறப்புற வழி எங்ஙனம் சொல்வாய்?
சீர்ப்படுத்த மனிதன் இல்லை இங்கே- உன்னை 
சிதைத்துவிட மதவெறியர்கள் தான் உண்டிங்கு!
இயற்கை அன்னையே !
இதுகாறும் இவர்கள் கொடுமை பொறுத்தாய்
இனி உணர்ந்துகொள் உனக்கும்தான் 
தன் கையே தனக்குதவி !!!

Saturday, March 26, 2011

தொலைந்து விட்ட நான் .....

உலகமெங்கும் உன்னதம் பெறுகிறேன்!
உல்லாசமாக உலா வருகிறேன்!
உயிராய் உணர்வாய்த் திகழ்ந்தேன் அன்று
உருவின்றி விட்டாய் என்னை நீயோ இன்று!
தன்னிகரில்லாதவள் என்று பலருரைக்க- நானோ 
தனிமைப் படுத்தப் பட்டதேனோ இவ்விடத்தே??
மனிதா!! மன்றாடுகிறேன்!!
பரப்பக் கேட்கவில்லை என்னை நான் 
பகரக் கேட்கிறேன் உந்தன் நாவால் அனுதினமும்!
தமிழ் எந்தன் பெயர்- மீண்டும் 
தழைக்கச் செய்வாய் என்னை உந்தன் மண்ணிலே
தலைசிறக்கச் செய்கிறேன் உன்னை விண்ணிலும்!

Friday, March 18, 2011

"போலாம்.... ரைட்! ரைட்!"

                   அன்று இரவு 9.30 மணி இருக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேர்ந்து, பேருந்திற்காகக் காத்திருந்த சமயத்தில் அந்தப் பேருந்து வந்து நின்றது.... 123 UD...திருச்சி செல்லும் வண்டி. முன் பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் சிலதே இருக்க, விருப்பப்பட்ட இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யக் காத்திருந்த பயணிகளில் நானும் சேர்த்தி! பொதுவாக இது போன்ற பேருந்துகளுக்கே உரித்தான மூட்டைப் பூச்சி, உடைந்த சாளரம், கயிற்றால் கட்டப்பட்ட முன் கதவு, பின் புறம் சற்றும் சாய்க்க  முடியாத இருக்கை, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டும் செயலற்றுக் கிடக்கும் தொலைக்காட்சிப் பெட்டி, அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்படுவது போன்ற மின் விசிறிகளும் விளக்குகளும் இதற்கு சற்றும் விதிவிலக்கல்ல!! ஈதனைத்திற்கும் இடையில் எனக்கென்று ஒரு இடத்தை அமைத்துக் கொண்டு, பயணம் செய்யத் தயாரானபோது, நடத்துனர் என்னை வெறித்து நோக்குவதை உணர்ந்தேன். அவர் என்னிடம் பேச முற்பட்டார். பயணச் சீட்டிற்காகவோ என்றெண்ணி நான் அவரை நோக்க, அந்தப் பார்வையே கடும் சினமுடன் கூடியதாக மாற எனக்கு சிறிதும் நேரம் பிடிக்கவில்லை. காரணம், அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் அப்படி! "சிங்கிளா (single)  வந்தா சீட்டு கிடையாதும்மா !",என்று அவர் சொல்லியது தான் தாமதம், பொறிந்து தள்ளிவிட்டேன். பணம் இருப்பின் பயணம் செய்யலாம் என்றது போக, இப்பொழுது இது போன்ற நியதிகள் உட்சேருவதன் நோக்கம் தான் என்ன என்று சிறிதும் புரியவில்லை!!
 அரசுப் பேருந்தில் இது போன்ற விஷயங்கள் சர்வ சாதாரணமாக ஆகிக் கொண்டு வருகின்றன. இப்படி இருக்க, முன்னரே, "சிங்கிளா வருபவருக்கு சீட்டு கிடையாது", என்று ஒரு அறிவிப்புப் பலகை வைத்திருக்கலாமே! வருபவர் எல்லாம் துணையுடன் தான் வரவேண்டும் என்பது எவ்வளவு அற்பமாக இருக்கிறது ? ஏறும் முன்பு, தனியே வருபவர் எவராயினும் "நான் தனியாகப் பயணம் செய்ய உள்ளேன். உடன் வருபவர் வரலாம்!", என்று கூட்டு சேர்த்துக்  கொள்ள வேண்டும் போலிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் முகப் புத்தகத்தில் ( FACE BOOK ) இருப்பது போன்று "committed","in a relationship","engaged to" என்று ஒரு அடையாள அட்டையுடன் மட்டுமே தனியே செல்ல இயலும்!!
                 மேலும், பெண்கள் தனியே பயணம் செய்கிறார்களே என்பதால் உரைக்கப் பட்டதன்று இது! தனியே வரும் அந்தப் பெண்ணின் அடுத்திருக்கும் இருக்கையில் யாரை அமர வைப்பது என்பதும், இல்லையேல் ஒரு சீட்டிற்கான பணம் போய்விடுமே என்பதுமே இவர்களின் முக்கியக் கவலையாக உள்ளது!!! இந்த அளவிற்கு யோசிக்கும் இவர்கள், சில நேரங்களில் பேருந்தில் நான்கு இருக்கைகள் மட்டுமே இருக்கும் கடைசி வரிசையில் ஐந்தாவதாவதாக ஒருவரை ஏற்றவும்   சற்றும் தயங்குவதில்லை.கொடுமையிலும் கொடுமை, அதற்கும் முழுக் கட்டணம்; ஆனால் அளிக்கப்படும் இருக்கையோ மத்தியில் இருக்கும் பெட்டி....உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டும் அது கிட்டினால்....! சாதாரண குண்டு குழிகளுக்கே ஆட்டம் கண்டுவிடும் நம் ஊர் பேருந்துகளில் இத்தகைய இருக்கையில் (மன்னிக்கவும்... நான் அந்தப்  பெட்டியை இருக்கை என்றே பெயரிடும்படி ஆகிவிட்டது!) அமர்ந்தால் கண்ணிமைக்கும் நொடியில் நாம் கடைசி வரிசையிலிருந்து முதல் வரிசைக்கு வருவது என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை! இதற்கும் மேலாக, குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது! ஒரு வேளை  அனைத்து இருக்கைகளுக்கும் ஆட்கள் இருந்தாலும், நம் நடத்துனர் திருப்தி அடைவதாக இல்லை. ஆசை யாரை விட்டது! இப்போது இவர் தரப்போகும் இடமோ  நான் முன்னர் குறிப்பிட்ட பெட்டிக்கும்  மேலானது என்பதைக் கருத்தில் கொள்ளவும். பேருந்தில் ஓட்டுநரின் பின்புறம் ஒரு சிறு காலி இடம் இருப்பதைப் பலர் கவனித்து இருக்கலாம். அதில் வண்டியை சுத்தம் செய்பவரோ அல்லது நடத்துனரோ அவ்வப் பொழுது உறங்குவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். சமயத்தில் இவர்கள் இந்த இடத்தையும் தியாகம் செய்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர்களின் தியாக மனப்பான்மை தான் என்னே!!! "இதுவும் கடந்து போகும்!" என்பதற்கிணங்க, இவர்கள் சில நேரங்களில் பாரி வள்ளலாவதும் உண்டு. அத்தகு தருணத்தில், பேருந்தில் நடப்பதற்கென்று ஒதுக்கப்பட்ட தடத்தில் குறைந்தபட்சம் நான்கு பேருக்காவது இடம் கொடுக்கிறார்கள் .... அதுவும் அதே முழுக் கட்டணத்தில்!!!    ஒரு சில வண்டிகளில் இதே நடத்துனர்கள் மருத்துவராகவும் உருக்கொள்கிறார்கள். மூட்டைப் பூச்சித் தொல்லை தாங்க முடியாமல் நீங்கள் சென்று புகார் கொடுத்தால், அவர் பூச்சிக்கடிக்கு மருந்து கூட பரிந்துரைக்கிறார்!! 
                     சரி ... இதைச் சிறிது நேரம் விட்டுவிட்டு, இரவு நேரங்களில் உணவுக்காகப் பேருந்தை நிறுத்தும் இடத்தின் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.  ஒரே பார்வையில் அருவருப்பைத் தூண்டும் அளவுக்கு இருக்கும் இவ்விடங்கள் ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் மட்டும் எப்படி புனிதமான இடங்களாகக் காட்சியளிக்கின்றனவோ தெரியவில்லை! போகட்டும், இங்கு இருக்கும் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் அதற்கான அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் இரண்டு அல்லது மூன்று ரூபாய் கூடுதலாகவே வைத்து விற்கப்படுகின்றன; அதன் தரத்திற்கும் உத்திரவாதம் இல்லை. இது எந்த விதத்தில் நியாயம்? இதனை எதிர்த்துக் கேட்பாரும் எவருமிலர். காரணம், அப்பொழுதிற்கு அவர்களுடைய தேவையாக இருப்பது, பசியைப் போக்குவதற்கென ஏதேனும் ஒரு பண்டம். இதற்காக சற்றுக் கூடுதலாக செலவழிக்க எவரும் தயங்குவதில்லை. நடுநிசியில் கடையைத் திறந்து வைப்பதால் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்; இங்கிருக்கும் கட்டணக் கழிப்பிடங்களை மட்டுமாவது சுத்தமாகப் பராமரிக்க வேண்டாமா? பேருந்தினுள் அமர்ந்திருக்கும்போதே நாற்றம் குடலைப் புரட்டுகிறது! ஏன்? அரசு இவையனைத்தையும் ஏற்று நடத்தக் கூடாதா? இதிலும் சற்று தலையிட்டால் தான் என்ன? இதன் மூலம் அரசு வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது மட்டுமில்லாமல், தனக்கென்று ஒரு கணிசமானத் தொகையையும் ஈட்டக் கூடும்!
                              சொகுசுப் பேருந்து என்ற பெயரில் சொக்க வைக்கும் இவர்கள் சொகுசு என்று கருதுவது மேற்கூறியவைகளைத்தானா? மக்களே! சிந்திப்பீர்!! ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுக்காரர்களும் இருந்தே தீருவார்கள்! "தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்!". எனவே, தயைக்கூர்ந்து உங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெறுங்கள்! குரல் கொடுக்கத் துவங்குங்கள் ; குற்றங்களும் குறையத் தொடங்கும்! தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ள இத்தருணத்தில், அமையப் போகும் அரசு இதுபோன்ற இடர்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதும் மீண்டும் கேள்விக்குறியாக்குவதும் உங்கள் கையில்! உங்களது தேவை பேரின்பமா பேரிடரா என்று நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள்!!!   
        

Sunday, February 20, 2011

கனவு மெய்ப்பட வேண்டும் !

               "அம்மா! .... நாளை மறுநாள் ராணுவத்தில் சேர்வதற்கான தேர்ச்சிப் போட்டிகள் நடைபெற உள்ளன. நான் பயிற்சிக்கு சென்றுவிட்டு வருகிறேன்", என்றவாறு மெல்ல நகர்ந்தான் கார்த்திக்.
                     சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்பது கார்த்திக்கிற்கு ஒரு துடிப்பாகவே இருந்தது. அதற்கான நேரம் தற்பொழுது வந்துவிட்டதால் மிகவும் நெகிழ்ந்தான். அவனுடைய ஆசைக்கோ யாரும் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது அவனுக்கு ஒரு பக்கபலமாகவே இருந்தது.
                       இரண்டொரு நாளில் ராணுவத்தில் சேர்வதற்கான தேர்ச்சிப் போட்டிகள் நடைபெற்றன. தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டதன் களிப்பு கார்த்திக் முகத்தில் தாண்டவமாடியது.
அம்மாவுக்கு, பிள்ளை தன்னை விட்டு வேற்றிடம் சென்றுவிடுவானே என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், தன் சுயகாலில் நிற்க அவன் அறிந்துகொண்டதனாலும், தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவனுடைய தொலைநோக்கு எண்ணமும், ஒருவகையில் அவளை பூரிப்பில் ஆழ்த்தியது
                         கார்த்திக் ராணுவத்தில் சேர்ந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டனசிறுவயதிலிருந்தே அவனுடைய எண்ணங்களை செம்மைப்படுத்துவதிலேயே அவன் அன்னை முக்கியத்துவம் கொடுத்து வந்தாள். அவனுக்கு உலகத்தைப் பற்றி பலவகையில் எடுத்துரைத்தாள். "இந்த உலகம் முழுவதுமே இறைவனின் படைப்பு. இதில்  எந்த ஒரு பொருளுமே ஒருவருக்கே உரியது அன்று. இந்த உலகைக் காப்பது மட்டுமே நம் ஒவ்வொருவரின் கடமை", என்று அம்மா கூறிய மொழிகள் நினைவுக்கு வர, ரயிலில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் கார்த்திக்.
                          எந்த ஒரு செயலையுமே 'முடியும்' 'சாத்தியம்' என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கும் கார்த்திக், வாழ்க்கையில் பல தடுமாற்றங்களை சந்தித்திருக்கிறான். எனினும், தன் அன்னையின் கூற்றுகளை நினைவில் கொண்டு, எத்தனை விதமான தடங்கல்கள் வந்தாலும் அதனை எளிதில் எதிர்கொள்ளும் எண்ணம் படைத்தவனானான். அதற்கு கிடைத்த பரிசு...அவன் இன்று வகிக்கும் பதவி!
                         இன்னும் ஒரு மணி நேரம் தான்! "தம்பி! நீங்க எங்க போறீங்க?", ஒரு பயணியின் குரல் கார்த்திக்கை நோக்கிச் சென்றது. "அம்மாவைப் பார்க்க!" என்று எழுச்சிமிக்க குரலில் உரைத்தான் கார்த்திக். ஆம்! பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தன் அன்னையைக் காணவந்த மகிழ்ச்சி அவன் முகத்தைச் சூழ்ந்திருந்தது. ரயிலை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தான். வீட்டை அடைந்து "அம்மா...!" என்று கத்தியவாறே கதவைத் தட்ட, திறக்க முற்படும் அன்னை பிள்ளையைப் பார்த்த களிப்பிலும், பிள்ளை தன் சொந்த உழைப்பால் இத்தனை பெரிய பதவியில் தேசத்தை வழிநடத்த பாடுபடுகிறான் என்ற ஆனந்தத்திலும் மூர்ச்சையடைகிறாள்.
                        முகத்தில் நீர்த்துளிகள் முத்தமிட, "கார்த்திக்...கார்த்திக் ...." என்று கூறிக்கொண்டே திண்ணையில் படுத்திருந்த தாமரை எழுந்தாள். 'உள்ளே வந்து உறங்கு! மழை வருகிறது போலிருக்கிறது. சளி பிடித்து உடல்நிலை சரியில்லாமல் போனால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து', என்றவாறு கணவனின் குரல். ஆம்.... அனைத்தும் கனவே!
"தாமரை இப்போது தான் கருவுற்றிருக்கிறாள்!!!"
                         இவ்வாறாக தன் பிள்ளைகளை நானிலம் போற்ற வளர்க்க வேண்டும் என்ற கருத்துக் கொண்ட தாய்மார்கள் எண்ணற்றவர்கள். தங்களுடைய எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க அவர்கள் தொடங்கும் காலம் சீர்பெற்றது. அத்தகைய தாய்மார்களின் கனவு மெய்ப்பட வேண்டும்!                 

சறுக்கு மரம்

16, அக்டோபர், 2010
" அன்று.... சனிக்கிழமை  .. காலை 11.00 மணியளவு . அன்றைய நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இயல்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் , அவையோரிடம் அதற்கான எதிர்ப்பார்ப்புகள் சற்று அதிகமாகவே தென்பட்டன.
                      "அனைவருக்கும் வணக்கம்! இன்றைய நிகழ்ச்சியின் முதல் படியாக பார்வையாளர்களிலிருந்து மூவரை மேடைக்கு அழைக்கிறேன். அவர்களில் ஒருவர் முதியவராகவும், இரண்டாமவர் இளமை ததும்பும் இளைஞராகவும் , மூன்றாமவர் ஒரு பள்ளி செல்லும் குழந்தையாகவும் இருத்தல் வேண்டும்.!", என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கூறிய சில நிமிடங்களில் , குழப்பம் மிகுந்த அவயோரிடமிருந்து, தேவைக்கேற்ப மூவர் வந்தனர்.
              மூவருக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப் பட்டது. தலைப்பு :'சறுக்கு மரம் '. ஒதுக்கப்பட்ட அவகாசத்தில் அவர்களுடைய மனத் திரைகளை விலக்கி, எண்ணங்களுக்கு வண்ணம் தீட்ட முற்பட  வேண்டும் . போட்டி துவங்கியது -

  பள்ளி செல்லும் குழந்தையின்  பதில்  :-
          சறுக்கு மரம் -'நான்  தினமும் பள்ளி முடிந்ததும் என் தோழி தீபாவுடன் சறுக்கு மரம் விளையாடுவேன். அதில் சறுக்கி விளையாட மிகவும் நன்றாக இருக்கும் .விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் என் பொழுதுபோக்கு இதுவே!'

இளைஞனின் பதில்  :-
           சறுக்கு மரம் - 'சற்று  இத்தலைப்பைப் பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்தோமேயானால்  இதன் உள்ளர்த்தம் வெளிப்படும். சறுக்கு மரத்தில் விளையாடும் பொழுது நாம் மேலிருந்து கீழே உள்ள நிலைக்கு வருகிறோமே என்று சிறிதும் அஞ்சுவதில்லை. மேலும், ஒரு முறை தவறி விழுந்தால்  மீண்டும் அதில் ஏறி விளையாடுவதற்கு யோசிப்பதில்லை. காரணம், ஆங்கே நம் மனதில் முதலிடம் வகிப்பது நமது விளையாட வேண்டும் என்ற எண்ணமே! மற்றவை நமக்கு சற்றும் தடையாக இருப்பதில்லை.
                          இது ஒரு வகையில் நட்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். நண்பர் கூட்டம் அதுவோ பெருகப் பெருக மகிழ்ச்சியின் பெருக்கமும் காணப்படுகிறது. நாம் அவர்களோடு  இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் நம் வளர்ச்சியைப் பற்றி எண்ணுவதில்லை. சுயநலம் தலைக்கேறுவதில்லை.கவலைகள் நம்மை அண்டுவதில்லை.முக்கியமாக, நாம் எந்த நிலையில் இருந்தாலும் அதனைப் பற்றி சிந்திப்பதில்லை'.

'முதியவரின் பதில்' :-
        சறுக்கு மரம் -'கலியுகமதனில் மனிதர்கள் சுயநலம் கொண்டவர்களாகவும் , நாட்டின் முன்னேற்றமதனில் சிறிதும் நாட்டம் இல்லாதவர்களாகவும் இருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. இக்கால அரசியல் முறைகளைப் பார்த்தோமேயானால் நம் நாடு எப்பொழுது முன்னேற்ற நிலையை அடையும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
        சறுக்கு மரத்தில் ஒரு முறை ஏறிய பின்னர் எவரும் சறுக்கி கீழே வராமல் இருப்பதில்லை.அதற்காக வருத்தமுறுவதும் இல்லை அந்தப் பயணமானது இன்பத்தைத் தரக்கூடியதாக உள்ளது.அனைவரையும் உற்சாகத்திற்கு ஆளாக்குகிறது.
         அரசியல்வாதிகள் தங்களது அரசியல் பயணத்தை சறுக்கு மரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். மேல் நிலையை அடைந்த அரசியலாளர்கள் நாமும் ஒரு காலத்தில் கீழுருந்தவர்கள்தான் என்ற உண்மையை உணர்ந்து சக மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சியுற வேண்டும் .அனைவரையும் அத்தகைய சேவையில் ஈடுபடுத்தி கிழ்மக்களுடைய தரத்தையும் உயர்த்தப் பார்த்திடுதல் வேண்டும்.
           இவ்வாறன்றி, மேல்நிலையை அடைந்த இவர்கள் மற்றவரின் நிலையை அறிவாரிலர் என்றால் மேல்நிலையை நோக்கிவரும் அனைவருக்கும் இவர்கள் ஒரு தடையாகவே இருப்பார்கள் என்பதை 'சறுக்கு மரம்' என்ற பதத்தின் தொகுப்பு குறிப்பால் உணர்த்துகிறது'.
           இம்முவருடைய பதில்களும் பார்வையாளர்களுக்கு வாசிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து அன்றைய தினத்திற்கான சிறப்பு விருந்தினர் பேசலாயினார்."இன்று இந்த மூவர் அளித்த பதில்கள் தான் மனிதனின் மூன்று பருவத்தைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி, நமது மனத்தின் வளர்ச்சி நிலையையும் அது வெகு அழகாக எடுத்துரைக்கின்றது . ஒவ்வொரு சூழலையும் நாம் கொள்வது, அதனை நாம் பார்க்கும் முறையிலேயே உள்ளது.அந்தக் குழந்தையிடம் சறுக்கு மரத்தைப் பற்றி கேட்ட பொழுது அது அதனை ஒரு விளையாட்டாகவே கொண்டது, வெளிப்பட்டது.அது குழந்தைப் பருவம்.அறிவின் முதிர்ச்சியைக் காட்டும் வகையில் அதே விளையாட்டு ஒரு இளைஞனை, வாழ்க்கையின் மிக முக்கியப் பங்கு வகிக்கும் நண்பர்களை நினைவூட்டுகிறது. முதியவரின் பதிலோ, அனைத்தையும் அனுபவித்து சுயநலத்தை மறந்து நாட்டை செம்மைப்படுத்தும் நோக்கத்தை அதனோடு இணைக்கச் செய்தது. இந்த மூன்றிலும் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான ஒன்று மூலப் பொருளான           'சறுக்கு மரம்' என்பதே ஆகும். அது எந்த ஒரு இடத்திலும் மாறுபடவே இல்லையே! அதேபோன்றுதான் நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனையும் அதற்கான தீர்வும் அதனிடமே உள்ளது. அதனைக் கண்டுகொள்ள, நாம் நோக்கவேண்டிய திசை மட்டுமே வேறு! இதனை உணர்ந்து கொண்டால் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் ஒரு உல்லாசப் பயணமாகவே என்றும் தென்படும்!" என்று கூறி அமர்ந்தார்".

       இவ்வாறு நிகழ்ச்சியின் தொகுப்பு வார இதழ் ஒன்றில் வெளியாக, அதன் வாசகர் ஒருவரின் விமர்சனம்:
                        'விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டோர்'. நன்றி ஆசிரியரே! புறப்பட்டுவிட்டேன் இதோ... ஜீவா பூங்காவிலுள்ள சறுக்கு மரத்திற்கு.... மகிழ்ச்சி மலரட்டும்! ! ! :-)  
                                      

Friday, February 11, 2011

என்னுடன் வா !

வியந்தே போகிறேன் உன்னை எண்ணி 
என்னுள் அல்லவோ இருக்கிறாய் - பின் 
இயைந்து செயல்பட மறுப்பதென்ன ?
கண்ணால் காண முயலும் முன் 
பாய்ந்து அதனைப் பார்க்கின்றாய் !
பண்பட்ட மனம் அதனிடமே 
பாசாங்கினைப் பொழிகின்றாய் !

உன் வேகப் போக்கை நான் அறிவேன் 
எனினும் ஏய்க்க இயலவில்லை என்ன விந்தை?
இன்பத்தைத் தருவாயெனில்  ஆனந்தமே - அட !
துன்பமும் உடனல்லவோ தருகின்றாய் !
தன்னலம் தலைத்தூக்க உணர்கிறேன் 
என்செய்வது நான் மகானில்லையே !-
சுயநலம் எந்தன் சிறு குழந்தை !!!


திசையறியாமல் திணறும் என்மேல் 
வசைபாட முயலும் பல்வகையோரின் 
தீக்குணம் தான் தெரிந்ததன்றோ ? -பின் 
வீண் கவலையதனைச் சேர்ப்பாயேனோ என்னிடத்தே?
தடங்கல் வருமிடத்தே தடுத்திடுவாய்- அதுபோதும் 
விளி தங்கிடும் என்னிடம் தன்னாலே !- மீறி  
மாயையால் என்னை மயக்காதே !


உடன்வர அழைக்கிறேன் தினம்தினமே 
ஊசலாடுகிறாய் ஏனோ அங்குமிங்கும் ?
விலக்க என்னால் முடியாது - உன்னை
விளக்கவும் என்றும் இயலாது !
குறைத்திடுவாய் உன் வேகம்தனை 
குறை தீர்த்திடுவாய் உடனிருந்தே - என் 
நினைவலையே அலைபாயாதே நீ !!!