Monday, June 21, 2010

மதிமுகமோ?

இலைகளுக்கிடையில்  இன்னமுதாய் 
என்றும் நீயோ தென்படவே 
மலைகளுக்கிடையே மாயமதாய் 
இன்றோ நீ மறைந்ததேனோ?


காரிருள் அதுவோ படர்ந்திடவே 
காத்திருந்தேன் நானும் தான்!
தவழ்ந்து வந்த வெண்மதியே  - இன்று 
வெந்தழல் போன்ற காட்சி ஏனோ ?


கூவி அழைத்தேன் - தோழா நீ
குவிந்த அழகினைக் கண்டாயோ 
மதியின் முகத் தோற்றத்திலே!
அன்றி , விரைந்து அதனைக் கண்டிடுவாய்!


தேடுதல் வேட்டை துவங்கிடவே 
தேக்கமுற்ற வெண்மதியே - நீ 
தோழனைக் கண்டு  நாணமுற்றே
கருமுகிலில் புகுந்து கொண்டாயோ?


எண்ணிப் பார்த்தேன் சில நொடிகள் 
விந்தையூட்டும்  வெண்மதியே  மறைந்தாலும்  நீ 
நிறைந்தாயே எந்தன் சிந்தையிலே ! - இனி
மறைந்தாலும் தேய்ந்தாலும் கண்டிடுவேன் - உன்னை
மதியே எந்தன் மதியாலே !!!

Sunday, June 20, 2010

நிழலைத் தேடி ....

சிக்கல் நிறைந்த உலகந்தனயே 
சீறிப் பாய்ந்து சீர்ப்படுத்த - நானும் 
சிங்கார நடையுடனே
சிட்டாய்ப் பறந்து வந்தேனோ ?

 பாதம் பதித்த நாள்முதலே 
 பாங்காய் என்னை வளர்த்திட்டு 
 பாசந்தனை பொழிந்திட்டு 
பாரில் நானும் வென்றிடவே 
பாதை காட்டும் நற்றாயை 
பார்த்திடத் தானிங்கு வந்தேனோ ?


நன்மை தீமை அறியேனே - நான் 
நானிலம் காக்க வேண்டுமன்றோ ?
நிலையாய் நிற்பன எதுவென்று 
நினைத்து முடித்த மறுநொடியே 
நிலைக்கவில்லை எதுவும்தான் !!


விடியல் காண வந்தேனே  - தாய் 
மடியில் சாய்ந்து சிந்தித்தேன் !!!
மாற்றம் பற்பல வேண்டுமே - என்றும் 
சீற்றம் கொண்டு செயல்படவே !!!


தேடித் திரிந்தேன் துணையொன்றை 
ஓடிச் சென்று ஒளிந்ததேனோ ?
வாடிப் போனேன் இது கண்டே 
கடிந்து கொண்டேன் உள்ளந்தனிலே !!


இன்றுபோல் என்றும் தான் 
இன்பமாய் வாழ்ந்திடவே - நானும் 
சுட்டிப் பயலாய்த் திரிந்திடவே 
எட்டிப் பார்த்தேன் உலகினிலே !!!


நிழலோ நிஜமாய் மாறிடவே ....
என் 
நிழலுக்கு நிஜம் தேடுவேனோ ?
நிஜத்திற்கு நகல் ஆவேனோ ?

வானத்தின் வர்ணஜாலம்


வட்ட வட்ட முகம்தனிலே 
வாரிச் சுருட்டிய முத்துச் சிரிப்போ 
விண்மீன் கூட்டத்தின் ஒருங்கிணைப்பு !
வண்ண வண்ண உடையினிலே 
விண்ணில் உலா வருகின்றாய் !
வாங்கிக் கொடுத்தவர் யாரென்று 
வாய் திறந்து பேசாயோ ?
அனைத்தும் நிறைந்த உன்னில் தான் 
ஆதவன் வந்து திலகமிட்டான் !

பறவைகள் பறந்திடும் சாலையோ - நீ 
பகலவன் உறங்கிடும் படுக்கையோ ?
ஆதி அந்தம் கண்டிடவே 
அனுதினமும் முயன்றிட்டோம் !
அன்பர்களுக்கு உதவிடவே 
ஆதவனும் வந்தானோ ?

எட்டித் தொட முயன்றிடவே 
பட்டுப் பூச்சியாய்ப் பறக்கின்றாய் !
கரிய மேகம் கொண்டு நீயும் 
மாரியைத் தானிங்கு பொழிந்தாயோ ?
சினம் கொண்டு நீயும் தான் 
சீறிப் பாய்ந்து வந்தாலே 
சுற்றித் திரியும் எம்போன்றோர் 
சீவிக்கத் தானிங்கு இயன்றிடுமோ ?

வேறென்ன வேண்டும் ???

வெண்மதி அங்கோ அலைந்திடவே 
நிம்மதி தேடிய மனமொன்றே
நித்தமும் அழுகுரல் பரப்பிடவே 
சித்தமும் கவலை கொண்டதுவே !


கூக்குரல் தினம்தினம் ஒலித்திடவே 
யாரோ கள்வன் என்றே நான் 
திரும்பிப் பார்த்திட முயன்றிடவே 
சிக்கவில்லை எவரும்தன் !


தேடித் திரிந்தேன் யாரென்று 
ஓடிச் சென்று உதவிடவே 
நீர் யாரென்று வினவிடவே 
கண்ணீர் மல்கிய குரலொடு -


குமுறி அழுதது மனசாட்சி -
குலத்தில் உயர்ந்தோர் இல்லையே 
குழப்பம் கொள்வது எதனாலே ?
குடிமகன் நீயென்று உணர்ந்திட்டே 
குற்றம் தனை ஒழித்திடுவாய் !


கேட்டுத் தெளிந்த நானும் தான் 
வேறென்ன வேண்டும்  என்றிடவே -
வருந்திக் கூறியது மனசாட்சி :
வேண்டும் மனிதா மனிதத் தன்மை !!!

Saturday, June 19, 2010

தேடுகிறேன் என்னை !

அன்றோ  நானோ   சிறுபிள்ளை  
அன்னை அவளோ வசமிருக்க 
அள்ளிச் சூட்டினேன் முத்துச்சிரிப்பை
அளவில்லா அவள் அன்பினிலே !

தாயே  உலகின் வாழ்வதுவாய் 
தங்கித் திரிந்த எனக்கே தான்  
தோன்றியதங்கே புது உறவு 
தோழன் என்ற பெயராலே !


துள்ளித் திரிந்த காலமதை 
சொல்லில் சொல்லல் அரிதன்றோ 
கருவில் வேற்றுமை என்றாலும் 
கருத்தில் ஒன்றெனத் திகழ்ந்தோமே !


மாற்றம் கண்டிட வந்ததுவே 
மணவாழ்க்கை என்ற சிட்டொன்று ! 
மருண்டு நானும் நோக்கிடவே 
மலைக்க வைத்தன இன்னல்கள் !


மழலைக் குரலதுவோதான் 
மகிழ்ச்சி மழையைப் பொழிந்திடவே 
மண்ணில் உறையும் வாழ்வதுவோ 
பொன்னாய் மின்னுவது யாங்ஙனமோ ?


கடந்து சென்ற தருணங்கள் 
உடன்வர மறுத்தது  ஏனென்றே 
வியந்து  நோக்கிய மறுகணமே 
வயோதிகம் வந்தது வாசலிலே !


மனித வாழ்க்கை அதுதனிலே 
இனிதே கண்ட நிகழ்வுகளில் 
தொலைந்து போன உறவுகளில் - மீண்டும் 
தேடுகிறேன் என்னை நான் !!!

காலம்

நடக்கும்  என்று  நினைத்ததுவோ 
நடந்து  முடிந்த  பின்னாலே 
கடந்து   சென்று  பார்க்க  வைக்கும்  
காலமெனும்  கண்ணாடி !


நல்லது  தீயது  ஈதென்று  
உள்ளது  போன்றே  எடுத்துரைக்க ;
சொல்லது  செயலாய்த்  திரிந்திடவே
நல்வழி  காட்டும்  வழிகாட்டி  !
 
மாற்றம்  பல  நிகழ்ந்தாலும்
தோற்றம்  அதுவும்  மாறாமலே 
சுற்றம்  தனை  மறந்தாலும் 
சற்றும்  அதனைப்  பாராதே !! 

நான்

தரத்தக்க  சொல்லதுவாம்  
நன்மை  தீமை  இவ்விரண்டை  !
தந்திரத்தால்  எதனையுமே  
சாதித்திடும்  அச்சொல்லே  !


சுயநலச்  செயலது  புரிந்திடவே  
சுற்றம்  யாவும்  மறுத்திடுமே
சுருங்கக்  கூறின்  அச்சொல்லோ 
சுதந்திர  வாழ்க்கை  தேடுவதே !


தனிச்செயல்  ஏதும்  காண்பதற்கே  
தனிமை  அடைந்திடும்  அடைமொழியே  !
தகுதி  தரமோ  கருதாதே  
தானென்றிருக்கும்  திறனுடைத்தே  !


ஈற்றில் மாற்றம்  நிகழ்ந்தாலே
பற்றும்  அதுவோ  பெருகிடுமே  !
மற்றும்  இன்னோர்  சிறப்புண்டாம்
நாற்றிசை  என்றும்  துணையுண்டாம் !

நானோ  நாமாய்த்  திரிந்திடவே
நாளைய  உலகம்  மேம்படுமே  !
நமக்கேன்  என்று  நகர்ந்தாலே
நன்மை  காண்பது  அறிதேயாம் !!!  

காணக் கிடைப்பின் .....

தமிழ்மயமாதல்  கண்டீரோ 
திரைப்படங்கள்  தொடங்கி  தெருக்கள் வரை !
தேரிய  வழிகள்  பலவிருக்க 
தோன்றி யனவோ இவைதாமோ ??


மாறிவரும்  நிலையனைத்தும்  மாநாட்டிற்கா  - அன்றி 
மங்கி  வரும்  தமிழதனை  வளர்ப்பதற்கா ?
செயற்கரிய  செயலதுவோ  செய்திடவே 
செம்மொழியாம் தமிழங்கே  தழைத்திடுமோ ?? 


பிறநாட்டார்  போற்றிப் பணிந்திடவே
பறக்குது  தமிழ்க்கொடி  உயரத்திலே !
உள்நாட்டார்  இதனை  உணர்ந்திடவே
உந்துதல்  தேவையோ  சிந்திப்பீர் !!


பாடல் பாடிப் பயனில்லை - தமிழில் 
பகரும்  சொல்லே  போதுமானது ! 
பேசிப் பழ(க்)குக  தமிழதனை - என்றுமது 
பாரில் நின்றிடும் தன்னாலே !!


சங்கம்  கண்ட  தமிழதுவோ  செழித்திடவே
எங்கும்  கேட்கச்  செய்க  தமிழ்  முழக்கம் ! 
பொங்கி  வரும்  அத்தருணம்  காணக்  கிடைக்க
ஏங்கிக்  காத்திருக்கும்  தமிழரில்  ஒருத்தி !!!

Wednesday, June 9, 2010

புத்தாண்டே வருக!!!

விடைகொடுக்க  வந்துவிட்டோம்
விடைபெற்றுச் செல்லாயோ ? - நீ

ஆக்கம் பல தந்தாலும் உன்னை
ஆதரித்தே யாமும் தான்

தடுக்க என்றும் முயன்றாலும்
தாண்டிச் செல்லும் தருணமிதே !!

சில சில  நேரம் உன்மீதே
சினமோ நாங்கள் கொண்டிடவே

பல பல நேரம் நீயும் தான்
பாராட்டிற்கு ஆளானாய்!!

உன் பயணம் இனிதே நடந்ததுவே
உலகம் உன்னதம் அடைந்ததுவே !

புதுமை மேலும் படைத்திடவே
புதியதோர் ஆண்டும் வருகிறதே !

கனவுகள் யாவும் மெய்ப்படவே
காத்திருக்கும் காலமிதே !

பூமியில் புத்தொளி பொங்கிடவே
புத்தாண்டே நீ வருகவே !!!!

உண்மை நட்பு !

காற்றில்  கலந்த வாசம் நீ - உன்னை
சுவாசம் தீண்ட மறுக்குமோ ?
மறந்தும் உன்னை மறுத்தாலே
மாண்டே போகலாம் யாரறிவார் ??