Sunday, June 20, 2010

நிழலைத் தேடி ....

சிக்கல் நிறைந்த உலகந்தனயே 
சீறிப் பாய்ந்து சீர்ப்படுத்த - நானும் 
சிங்கார நடையுடனே
சிட்டாய்ப் பறந்து வந்தேனோ ?

 பாதம் பதித்த நாள்முதலே 
 பாங்காய் என்னை வளர்த்திட்டு 
 பாசந்தனை பொழிந்திட்டு 
பாரில் நானும் வென்றிடவே 
பாதை காட்டும் நற்றாயை 
பார்த்திடத் தானிங்கு வந்தேனோ ?


நன்மை தீமை அறியேனே - நான் 
நானிலம் காக்க வேண்டுமன்றோ ?
நிலையாய் நிற்பன எதுவென்று 
நினைத்து முடித்த மறுநொடியே 
நிலைக்கவில்லை எதுவும்தான் !!


விடியல் காண வந்தேனே  - தாய் 
மடியில் சாய்ந்து சிந்தித்தேன் !!!
மாற்றம் பற்பல வேண்டுமே - என்றும் 
சீற்றம் கொண்டு செயல்படவே !!!


தேடித் திரிந்தேன் துணையொன்றை 
ஓடிச் சென்று ஒளிந்ததேனோ ?
வாடிப் போனேன் இது கண்டே 
கடிந்து கொண்டேன் உள்ளந்தனிலே !!


இன்றுபோல் என்றும் தான் 
இன்பமாய் வாழ்ந்திடவே - நானும் 
சுட்டிப் பயலாய்த் திரிந்திடவே 
எட்டிப் பார்த்தேன் உலகினிலே !!!


நிழலோ நிஜமாய் மாறிடவே ....
என் 
நிழலுக்கு நிஜம் தேடுவேனோ ?
நிஜத்திற்கு நகல் ஆவேனோ ?

No comments:

Post a Comment