Wednesday, December 19, 2018

மீட்புப் பணியில்...

மூன்று வருடத்தில் மூழ்கியது...
மெதுவாய் என்னுள்ளே
மௌன மொழிகள் மட்டும் அவ்வப்பொழுது
மிக மென்மையாய் மெல்லமாய்ப்  பேசி
மனதின் ஒரு மூலையில்
மாறுதல்களை மறுக்காமல்
முடிந்தவரை மெருகேற்றி
மோதி மேல்வர முயல...
மேன்மேலும் முப்பொழுதும் அதனை
மொழிகிறேனன்றி  பிறிதில்லை!
மைத்தீட்டி மீண்டும் இணையத்தில் உலாவிட - இதோ
மீட்புப் பணியில் என் மன்மத தமிழ்!

Saturday, January 17, 2015

நீ வேண்டும் என நான்...

பனியாய்ப்  படர்ந்து நின்றேன் - உன்னைப்
பார்த்த நொடியில் உருகி உவக்க
இமையாய் இயங்கி வந்தேன் - என்றும்
ஈரொரு கணமும் விலகாதிருக்க
நிழலாய்த் தொடர்ந்து வந்தேன்  - உன்னை
நீண்ட நெடுந்தூரம் துணையாய்த் தொடர
காற்றாய் கரைந்து நின்றேன் - என்
கண்ணின் ஈரம் தனை உணர வைக்க
நீ மட்டும் போதும் என்றேன் - வாழ்வில்
நிலையாய் உனக்கு நிகராய்க் கண்டிலேன் ஒருவரையும்!!!

முதுமை கசக்குதோ?

ஈன்றவள் இன்று உடல் இளைத்து
என்னைக் கண்டுகொள்ள யாருமில்லை
என்றாங்கே ஈன ஸ்வரத்தில்
எதிர்நின்று அழுகுரல் எழுப்பி
வருந்துங்கால்... வாராயோ
என் செல்ல பிள்ளாய் - கேளாயோ
என்னவென்று அவள் வார்த்தைகளை
எட்டாக் கனி கேட்கவில்லை அவள் - நீ
எட்டிப் பார்க்க ஏங்குகிறாள்...
எடுத்து செல்வதில்லை யாரும்
எதனையும் என்றும் இப்பூவுலகில்...
முதுமையின் இலக்கணம் தெரியுமோ?
இன்று  அவளுக்கு; நாளை உனக்கு;
எனக்கும் தான் ஓர்நாள்...!!!

காத்திருந்த காதலி

நீ நான் மௌனம் இசை
இருள் குளிர் வெட்கம் ஊடல்
ஒரு துளி முத்தம் ...
அழகு நிலவே அலைகிறேன்
காதல் கொண்டு உன்னோடு!
காட்டிக்கொடுக்க யாருமில்லை
யவ்வன சுந்தரா பயந்து
பாய்ந்து மேகங்களில் ஒளியாதே
ஒரு போதும் கலங்கி மறையாதே
மறப்பெண் என் துணையோடு திரைகடல்
தாவி துள்ளிக்குதித்து உல்லாசமாய்
உடன் வருகிறாய் எனில் வா...
வேற்று கிரகம் தனில் சிட்டாய்
சென்று குடிபுகுவோம்...
கற்பனையில்லை!!!

Sunday, December 14, 2014

உன்னோடு நான் மட்டும்!

நீயும் நானும் இங்கே
நீண்ட நெடுஞ்சாலையில்
நகர்ந்து மெல்ல செல்லும்
நிழல் மட்டும் பின்தொடர

குளிர் காற்றும் கரு மேகங்களும்
கை குலுக்கி மகிழ்ந்தாட...
கண்டும் காணாதவாறு
கண்ணே உன்னுருவில் நான் மயங்க

அதோ அங்கே மலையின் சுனை வைரங்கள்
ஆங்காங்கே இருபுறமும் மின்னிட
அப்பொழுதில் ஆழ்ந்த அமைதியோடு
அன்பே உன் தோளில் சாய்ந்தபடி

என்றென்றும் உன்னோடு நான் மட்டும்!!!

பயண மயக்கம்!!

என்னுடன் அழைத்து வருகிறேன் 
எண்ணங்களின் எழுச்சிகளையும் 
எண்ணிலடங்கா உணர்ச்சிகளையும் 
எண்ணி எண்ணி தேக்கி வைத்த ஏக்கங்களையும்... 
எனக்காக என்றும் இருக்கும் உங்களுக்காக!
என் விழித்திரையில் முப்பரிமான வடிவில் 
எண்ணத்தில் வண்ணம் தீட்டி மெருகேற்றி 
எட்டிப்பிடித்து விண்ணில் திரையிட முன்னேறுகிறேன்...
என்றென்றும் இப்பயண நினைவுகளோடு!!
 

அம்மா!!!

கூட்டத்தில் புழுக்கத்துடன் நின்று கொண்டிருக்கும் பலருள் நிற்கவே சிரமப்பட்டு சோர்வுடன் நின்று கொண்டிருந்த  ஒரு பெண்மணியைப் பார்த்து பேருந்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது நிரம்பிய ஒருவர்: "நீங்க உட்காருங்கம்மா... பரவாயில்ல... நா இதோ இறங்கிடுவேன்!", என்று நகர்ந்து வழி விட, காற்றும் நுழைய முடியாத கூட்டத்திற்கு நடுவில் கூவி அழைக்கிறாள் அவள்... முன்புறம் நின்று கொண்டிருக்கும் 18 வயது நிரம்பிய தன்  மகனை..."தம்பீ!! உன்னால நிக்க முடியாது ராசா... வா இங்க வந்து உட்காரு!" 

Saturday, December 13, 2014

நில்! கவனி!! செல்!!!

சாலையில் மிதந்து செல்கையிலே
சத்தமிட்டு முத்தமிடும் உனக்கு
சற்றும் வெட்கம் இல்லையோ முன்னர் பலர் நிற்க?
செய்கை பாஷை தான் மறந்துவிட்டதோ!!
நினைவிருக்கட்டும் இது பொது இடம்!!!
நில்! கவனி!! செல்!!!


Thursday, December 26, 2013

என்றும் உனக்காக!

இறக்கும் தருவாயிலும்
இறுதி ஆசையாய்  நீ கேட்பது
துடிதுடிக்கதானோ........?????
இன்பம் யாதோ உனக்கதிலே?
என் அன்பு இதயமே....
மெச்சுகிறேன் உன் துறவு நிலையை!!!

Friday, April 5, 2013

உனைக் காணாமல்....

நாளொன்றதனில்  நிறைவாய் ... என்
நினைவாய் நின்று திரிகிறாய் !
பிரியும் அந்த அணுப்பொழுதும்
ஆயிரம் ஆண்டுகள் தாம் ...!
பிறகென்ன........
கண்களை அல்லவோ இமைத்தேன் !!!

Thursday, April 12, 2012

ஆசை முகம் மறந்து போச்சே...!

சிரித்து மயக்கி சிறகடிக்க
துரிதம் கொள்ளும் மின்மினியே!
யாதெனக் கொள்வேன் உனைநானே
யவ்வன சுந்தரன் உனைத்தானே!

மிதக்க வைக்கிறாய் மேல்வானில் - உன்னை
மிருதுவான தென்றலாய்க் கொள்ளவா?
தூண்டிச் செல்கிறாய் மனதை மெலிதாய்
கரையைத் தீண்டும் அலையெனக் கொள்ளவா?

தோன்றி மறைகிறாய் அவ்வப்பொழுது
தேய்ந்து வளரும் மதியெனக் கொள்ளவா?
பின்தொடர்கிறாய் என்றும் எப்பொழுதும்
தொடர்ந்து வரும் நிழலெனக் கொள்ளவா?

காண விதைக்கிறாய் இல்லாததை
காணல் நீரெனக் கொள்ளவா?
எட்டாக் கனியாய்த் தித்திக்கிறாய்
எளிதில் என்னை வஞ்சிக்கிறாய்!!

காத்திருக்கிறேன் காலங்காலமாய் உனைநம்பியே
காற்றில் தீட்டிய என் ஓவியங்களை
தண்ணீரில் எழுதிய என் காவியங்களை
திரட்டிப் புரட்ட ஓர்நாள் நோக்கி
ஆகாசக் கோட்டையின் வாசலிலே
ஆவலோடு ஆனந்தமாய் ஆசையாக!!!


Thursday, January 26, 2012

'புயல்'விழி 'தானே'!!??

சுட்டிச் சுழற்றும் உன் விழிச்சுழலில் சற்றே
எட்டிப் பார்க்கும் அளவிலா அழகைக்
கண்டு ரசித்த குற்றமோ??? - அண்டையில்
ஆண்டும் ஈண்டும் சிதறிக் கிடந்த
பல்லுயிர், பல்பொருள் அனைத்தும்
சில்லாய்ச் சிரிக்கின்றன சிலநொடிகள்
உன் விழிச்சிறையில்....!!!
ஒப்புகிறேன் பலருக்கு நானும்...
தப்பிப் பிழைத்த காரணத்தால்...!
கடைக்கண்ணால் அன்றோ பார்க்கிறேன்
எடைக் கணக்கின்றி ஈர்க்கும் அந்த
காந்தக் கண்களை இன்றும்....!!!


Sunday, October 30, 2011

கலியுகக் காதல்!

சிவப்பு மஞ்சள் பச்சையென்று
சிலிர்க்க வைக்கும் நிறங்களிலே
நிலைத்து நிற்கிறாய் கண்முன்னே -எப்பொழுதும்
நினைவில் நிற்கிறாய் ஏன் கண்ணே?
கண்ணைக் கவரும் அழகில்லை - அட!
கண்ணிமைக்க மறக்கிறேன் உனைக்கண்டே!!!
வாராய் என்று நன்கறிந்தும்
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்
உனக்காக என்றும் எனை மாற்றி
உள்ளம்தனில் காத்திருப்பின் இலக்கணம் கூறி!
படிக்கிறேன் பலவாறு தினம்தினமே
பகடைக்காயாய் சுழற்றும் உன்
மௌன உச்சரிப்புகளுக்கு உரு கொடுக்க,
மெல்ல மெல்ல உயிர் கொடுக்க!
பசியும் தூக்கமும் பிறிதாயிற்றே!
பாசமும் நட்பும் வேறாயிற்றே!
இது போல் இல்லை நான் முன்னே
இனி இன்பமும் துன்பமும் நீயானாய்!

காதல் போலத் தோற்றுகிறதோ??? - ஆம்!
கலியுகக் காதல் இதன் பெயராம்!
மென்பொருள் துறையில் முக்கியமாய்
மனிதனை இயந்திரம் ஆ(க்கி)ட்கொள்ளும்
கணிப்பொறிக் காதல் -  இஃது
காலம் காலமாய் ஒருதலையாக!!!


Tuesday, September 13, 2011

இன்றையநிலையில் நான்...

வெட்கித் தலைக்குனிவேனென்று 
விருப்பமில்லாவொன்றில்
விருட்டென்று விரைந்த நான் 
விடியல் பொழுது ஒவ்வொன்றிலும் 
விழிப்புணர்வு கொண்டு விசும்புகிறேன்...
வெறுப்புகளின் பிடியில் விருப்புகளைத் தேடி..!
மாறிப்போன என்னிலும் 
மரத்துப்போன மனத்திலும் 
உருமாறிப்போன என்...
விருப்பங்களே!!!
மன்னித்துவிடுங்கள்...!
துறவியாகிவிட்டேன் நான்!!!


Saturday, September 3, 2011

பாரியோ நீ மாரியே....!

முதல் துளி விழுந்ததும்
மூலை முடுக்குகளில் சிலர்...
மேலும் தொடர்கிறாய் விடாமல்
மல்கிய குரலோடு உன் அழுகையை...
ஊர்வலம் போகிறது ஆங்கே
உன்னை எதிர்த்து கறுப்புக் கொடி ஏந்தி!
யாருடைய ஆறுதலுக்காக
யாசித்து நிற்கிறாய் என்று புரியவில்லை!

காற்றும் மேகமும் உறுதுணையாய்க்
காவந்து செய்து உன் துயர் நீக்கப் பாடுபட,
நீட்டிக்கிறாய் உன் பிடிவாதத்தை...
நீயும் மனிதனைப் போல் தானோ?
உன் கண்ணீரில் காலம் காலமாய்
உல்லாசமாய் உள்ளம் நனைக்கும்
வேண்டாத உறவுக்கும், தேறாத அன்புக்கும்
தேடித் தேடி அலைகிறாய் ஏனோ?


Tuesday, July 26, 2011

காதல் தோல்வி!



காண விழைந்து ஓடோடி வந்தேன்
காலணி கூட அணியாமல்!
காத்திருக்கிறாய் எனக்கோ என்று!!!

என்னைக் காண ஒருபோதும் நீ
என் இருப்பிடம் தேடி வராமலிருந்தும்
கோபமில்லை உன்மேல் எனக்கு!!!

திரண்டு வந்து மெதுவாய்
திருடிச் சென்றாய் என்மனதை
திருப்பிக் கேட்கவும் மனமில்லை எனக்கு!!!

தீண்டிச் செல்லும் ஒவ்வொரு முறையும்
துள்ளிக் குதித்தேன் குதூகலத்தில்
என்னை மட்டும் தொடர்கிறாய் என்று!!!

சுவடுகள் பதித்துத் திரும்பிப் பார்த்தேன்
சுறுசுறுப்பாய்ப் பின்தொடர்ந்தாய்!
நான் என்றால் அவ்வளவு ஆசையா உனக்கு???

உன்னில் கலந்து உவகையில் மிதக்கயில்
உணர்ந்தேன் தற்செயலாய் அப்பொழுது
ஓராயிரம் காதலர்களா உனக்கு??? 

Monday, July 25, 2011

நன்றிகள் கோடி!!!

மறக்கவும் இல்லை - எதனையும்
மறைக்கவும் இல்லை!
ஏனென்று தெரியவில்லை
என் வார்த்தைகளும் கைவசம் இல்லை!
எண்ணி எண்ணி வியக்கிறேன்
எனகென்ன நேர்ந்ததென்று!
மற்றதெல்லாம் பிதற்றும் என்வாய்
மாதா பிதா எனில் மௌனமொழி பேசுகிறது!
தவறேதும் இல்லை என்மேல்
தவிர்க்க முடியாத உண்மை இதோ!
இன்று என்னுள் எல்லாமாய் எங்கும் நீவீரிருக்க - இருக்க  
இடமின்றி வார்த்தைகள் இறந்துவிட்டன போலும்!!!
இருப்பினும் உயிர்ப்பித்திருக்கிறேன் - என்
இனிய தமிழ்த்தாயைக் கொண்டு 
இக்கவிதையை !!! - உங்களுக்காக இதோ என் 
இருபத்தைந்தாம் படைப்பு சமர்ப்பணம்!!!
அரியதொரு பிறவியில்லை எனினும்
அறிய வைத்திருக்கிறீர்கள் என்னையும்
இப்பூவுலகில் சிலருக்கு!! நன்றி!!!
இன்னல்களிலும் இன்பமென்று
இருசுவை காண வைத்தீர் - வியந்தேன்!
இன்றும் தொடருகிறேன் அப்பணியை
நிலையில்லா இவ்வாழ்வில் நீக்கமற
நிலைத்திருக்கும் நினைவுகளில்!
வேண்டி நிற்கிறேன் எப்பிறப்பினிலும்
வேறொருவர் வேண்டாமென்று!
தேவைகளற்ற உங்களுக்கு 
தேகத்தால் என்றும் சேவை செய்யக் 
காத்திருப்பேன் காலம் காலமாய்- இக்
கருத்திலொன்றும் மாற்றமில்லை!!!

Friday, July 22, 2011

திருமண மலர்கள்!

சொல்லாமல் வந்த திசையிலே
சொல்லித் தந்த வார்த்தைகளை
செவி கொடுத்துத்தான் கேட்டேனே
செல்லும் இடமெல்லாம் செல்லமாய்...

அருகிலென்றாலும் உன்னைவிட்டு
அகல என்றும் நினைத்ததில்லை....
அந்நாள் இந்நாள் என்று இன்று என்  
அகம் கூற உணர்கிறேன்...

என்னைக் காக்கும் முயற்சியில்
என்றென்றும் நீயிருக்க,
எதிர்ப்பார்ப்புகளோடு எதிர்ப்பாராவிதமாய்
எடுத்துச் செல்கிறார்கள் என்னை!

நியதி இதுவென்று நினைத்தாலும்
நியாயம் தானா சொல்லிவிடு?
நீடூழி வாழ்க என்றாலும் - உன் 
நினைவுகளின்றி வாழ்வதெங்கே??
வாடுகிறேன்!!!!

Saturday, June 25, 2011

கால் கிலோ கல்வி !!!

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்"

ஒரு தாயானவள் ( தந்தையும் கூட! ) தன் மகன் அறிவிற் சிறந்து, நற்குணங்கள் ததும்பப் பெற்று ஊரார் புகழும்படியாக இருக்கிறான் எனும்போது,அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சி அடைகிறாள் என்பது இத்திருக்குறளின் விளக்கம். இப்படி ஒரு புறம் இருக்க, இக்கால நடைமுறைக்கேற்ப குறளை மாற்றி அமைக்கலாம் எனவும் தோற்றுகின்றது.

"ஈன்ற பொழுதிற் துவங்கி காசிறைப்பாய்உன்மகனை
சான்றோன் எனக்கேட்கத் தான்"

குழந்தை பிறந்தது முதல் காசை வாரி இறைக்கத் தொடங்கிவிட்டால் போதும், அதனைப் பிற்காலத்தில் சான்றோனாக்கிப் பார்த்திட இயலும். இதில் சான்றோன் எனும் சொல்லை (கல்விச்) சான்றிதழ் + உடையோன் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்!
             
தமிழ்நாட்டில், அதிலும் சென்னையில் மட்டும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இவற்றைப் "பள்ளிக்கூட்டங்கள்"
எனச் சொல்வதிலும் தவறில்லை. "கல்விக்கண் திறந்த காமராசர்" போன்ற பலரின் முயற்சியால் மதிய உணவுத் திட்டங்களோடு கூடி, இலவசக் கல்வி தரப்பட்டு, கல்வித் தரம் உயர்த்தப்பட்டு கல்வி இன்றியமையாததாக உலா வந்தது அக்காலம். இப்போதும் கல்விக்கூடங்களுக்குக் குறைபாடில்லை. விளைவு, கோயம்பேடு சந்தையில் காய்கறிகளையும் பழங்களையும் கூர் போட்டு விற்பதைப் போன்று கல்வியையும் கூவிக் கூவி விற்கும் நிலைமை வந்துவிட்டது. இதற்கான விலை அட்டவணை பள்ளியைப் பொறுத்து மாறுபடுகிறது.
எல்.கே.ஜி. - ரூ. 1,750 முதல் - ரூ. 24,000 வரை
12 - ஆம் வகுப்பு - ரூ. 7,750 முதல் - ரூ. 23,350 வரை
இது அரசுப் பள்ளிகள் அல்லாமல் தனியார் பள்ளிகளின் நிலை. இப்படி கல்விக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டும் இதற்கு மேல் வசூலிக்கும் பள்ளிகளும் இதில் அடக்கம். இப்படியிருக்க, தனியார் பள்ளிகளுக்கு, தான் நிர்ணயிக்கும் தொகையை, அரசு தானே வசூலித்து அப்பள்ளிகளிடம் ஒப்படைக்கலாமே!
கல்வி வியாபாரமாகி வருவதற்கு முக்கியக் காரணம் மக்களாகிய நாமே! சற்று சிந்தித்துப் பார்ப்போம் ... எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஆரம்பத்தில் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவது தான் என்ன? அதே எண்சுவடியும், அ, ஆ, இ, ஈ யும், a, b, c, d யும் தான். ஆனால் இதற்காக மாறுபடும் விலை அட்டவணையைப் பாருங்கள்! “standard” எனப்படும் “தரம்” தான் இதற்குக் காரணம் என்று பொதுவாக மக்களிடையே கருத்து நிலவுகிறது. இது ஒரு வகையில் உண்மை எனக் கொண்டாலும், இது மட்டுமே உண்மை எனக் கொள்ள முடியாது.  "infrastructure" என்று சொல்லப்படும் "அடிப்படைக் கட்டுமான வசதிகள்" இத்தகைய பள்ளிகளில் பெரும்பான்மையில் நன்றாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இதில் சேர்க்க விரும்புகின்றனர் என்றும் சொல்லலாம். இவர்கள் கனவுகளுக்கும் கணிப்புகளுக்கும் ஏற்றவாறு அப்பள்ளிகள் இருக்கின்றனவா என்பது ஒரு சில இடங்களில் கேள்விக்குறியே!
சில பள்ளிகளில் மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் அடுத்த நிலைக்குத் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியின் தரக் குறைவுக்கு இதுவும் பங்கு சேர்க்கின்றது. மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆசிரியர்கள் பலர் இருந்தும், இதுபோன்ற ஒரு சில ஆசிரியர்களால் கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே கருதப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. தற்பொழுது "சமச்சீர் கல்வி " என்னும் பெயரில் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மாணவர்களின் அறிவைக் கூர்மையாக்கும் விதமாக எவ்வெவற்றைச் சேர்க்க வேண்டும் என்பதும், எத்தகைய பாடத்திட்டம் அமைய வேண்டும் என்பதும் போக, பள்ளிகளின் தரத்தையும் சற்று ஆராய்ந்தால் நன்மை விளையும் என்பது ஒரு சாராரின் கருத்து. பத்தாம் வகுப்பு வரை எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மக்களுக்கு, தம் பிள்ளைகளைப் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கும் பொழுதுதான் பீதி கிளம்புகிறது. தரமான பள்ளியின் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள், தனிப்பயிற்சி நிலையங்கள் என்று எண்ணிலடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றது இவர்களின் தேவை. அட! தேவைக்கேற்ற பள்ளி தான் கிட்டியாயிற்றே? இன்னும் என்ன? என்று மனம் நினைத்தாலும், புற உலகின் உந்துதலால் கையிலடங்காமல் செலவாகத் துடிக்கும் பணம். இதில் பெரும்பாலும் அவதிப்படுவோர் மாணவர்கள் மட்டுமே!
பொறியியல் படிப்பும் மருத்துவப் படிப்பும் ஒவ்வொரு புறம் கையசைத்து நிற்க இரண்டு வருடம் அல்லும் பகலும் ஆசையை அடையப் போராட்டம்!!! இதற்கு வணிகவியல் தொடர்பான படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் விதிவிலக்கு! இதனைத் தொடரும் CA, CS, CWA, B.COM போன்ற படிப்புகள் பலருக்குக் கண்ணிலே தெரிவதே இல்லை. பணம் நிறைய செலவழித்துப் படித்தால் தான் படிப்பு என்று இப்படிப்புகளை ஏளனமாகப் பார்த்துப் பழகிவிட்டார்கள் போலும்! உண்மையில் சொல்லப் போனால், இப்பொழுது இத்தகு படிப்புகளில் மட்டுமே கல்வியின் உயிரோட்டம் காணப்படுகிறது. மேலும் எப்படியோ.... தெரியவில்லை!
நாம் மீண்டும் அறிவியல் சார்ந்து வருவோம்!!! இப்படி பிள்ளைகள் படித்தும், பாதி நேரம் பயத்தில் உழலுவதே பெற்றோர் மனநிலை. அடுத்த கட்டமாக, அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள்; இதில் சிலர் நுழைவுத் தேர்வுகளுக்காக தங்களைப் பத்து அல்லது ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஆயத்தப் படுத்திக் கொள்கிறார்கள். இவ்வனைத்தையும் அசைத்துப் பார்க்க வருகிறது தேர்வு முடிவுகள். முட்டி மோதி முண்டியடித்து 200 -க்கு 199 , 198  என வாங்கினாலும் போதுவதில்லை. இதற்கிடையில், இறுதித் தேர்வுக்குப் பின்னர், ஆனால் தேர்வு முடிவுகளுக்கு முன்னர் என்று பதம் பார்க்கத் தொடங்குகின்றன தனியார் கல்லூரிகள்.... பேரம் பேச ஆரம்பிக்கின்றனர்: "Mechanical Engineering " 18 லட்சம் ,"EEE" 16 லட்சம் என்று! ஐயோ... பிள்ளை இவ்வளவு உழைத்தும் எதிர்ப்பார்த்த கல்லூரியில், எதிர்ப்பார்த்த படிப்பு கிடைக்கவில்லை என்றால் என்செய்வது? கூரையைப் பிய்த்துக் கொண்டு போகின்றது பணம்- தனியார் கல்லூரிகளின் காலடியில், அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு! இது ஒரு புறம்.
கலந்தாய்வுக்காகக் காத்திருக்கும் கனவான்கள் மறுபுறம். பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி ஒதுக்கப்படும் இடங்களினால் "பிற்படுத்தப்படுவோர்" பற்றி அரசும் இதுவரையில் கண்டுகொண்டதாக இல்லை!!! இதில் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் "OC " எனப்படும் "open category" பிரிவினரே! "middle class" என்று பெரும்பான்மையாகக் காணப்படும் இத்தகைய நடுத்தரவர்கத்தினர் அடையும் அல்லல்களுக்கு அளவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் "மதில் மேல் பூனை கதை". எதற்கும் கையாலாகாத நிலை!
இது பொறியியல் படிப்பின் நிலை. பின் வருகிறது மருத்துவப் படிப்பு. எடுத்த எடுப்பில் 45 லட்சம் என,ஒரே வாயில் ஏப்பம் விட! அட.... அசருவதில்லை நம் மக்கள். தட்டுமுட்டு சாமான்களை விற்று அல்லது தலையை அடகு வைத்தாவது உள்புகுந்துவிடுகிரார்கள். எல்லாம் "சான்றோன்" படுத்தும் பாடு. இவை அனைத்தும் அரசுக்குத் தெரிந்திருந்தும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. "தனியார் கல்லூரிகளின்அதிகக் கட்டண வசூல் விவரங்கள் பற்றி உரிய ஆவணங்கள் , ஆதாரத்தோடு இருந்தால் மக்கள் முறையிடலாம் ! அதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்", என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார் என்று நாளேட்டில் செய்திகள் மட்டும் தவறாது வெளியாகும். யார் முறையிடப் போகிறார்கள் என்று அவர்கள் கருதுவதும் சரிதானே? நமக்கேன் வீண்வம்பு என்று இருப்பவர்கள் தானே நாம்!!! கல்விக்கடன், நகைக்கடன் என்று பலவகையில் திணறினாலும் அரசின் தவற்றைத் தட்டிக் கேட்க மனம் வராத தியாகிகள் நாம்!
இதோ, இன்னும் பணத்தின் பயணம் ஓயவில்லை. நான்கு அல்லது ஐந்தாண்டு உள்நாட்டு பட்டப்படிப்பிற்குப் பிறகும், வெறிக்க வைக்கும் வெளிநாட்டு மேற்படிப்பு. இருக்கும் உடைமைகள் அனைத்தையும் காட்டித் தயாராகிறது ஆவணங்கள்....மேலும் 35 லட்சத்திற்கும் மேல் பணம் பறக்கின்றது. நீண்ட பெருமூச்சுடன் நிமிர நினைக்கும் நிலையில், திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் கண்ணைக் கட்டுகிறது. ஊழல் மிகுந்த சமுதாயம் என்று கோஷமிட்டுப் பயனில்லை. பிறகென்ன, இத்தனை வருடங்களாகக் கொட்டியிறைத்த பணத்தை எப்படி மீட்பது ??? இது நாள் வரை உருவாக்கிய மருத்துவர்களும் பொறியியலாளர்களும் தங்கள் கைவரிசையைக் காட்டத் துவங்குகின்றனர். தாங்கள் மக்களிடம் கறக்கும் பணத்திற்கு அவர்கள் தரும் பதில்.... அதே "தரம்" (standard) மற்றும் " அடிப்படைக் கட்டுமான வசதிகள்" (infrastructure)!!! சிறு வயதிலிருந்தே கற்பிக்கப் பட்டுள்ளதல்லவா...பசுமரத்தாணிபோல பதிந்து கிடக்கிறது நெஞ்சில்!
இதே நிலையில் சென்று கொண்டிருந்தால் "கல்வி" என்பது ஒரு நாளில் எட்டாக் கனியாகும் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. இத்தகைய நிலவரம் மேலும் தொடராமல் முளையிலேயே கிள்ளி விட மக்களாகிய நமக்கு முழு உரிமை உண்டு. ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு! ஒன்று திரண்டால் உண்டு முடிவு! சிந்திப்பீர்!!! செயல்படுவீர்!!!

Saturday, June 18, 2011

விடைபெற...

சிக்கித் தவிக்கிறேன் அனுதினமும்- பள்ளிச்
சீருடை அணியும் இவ்வயதில்.................!
பயில்கிறேன் நானோ பல விதமாய்
பணத்தின் பிடிதான் உயர்ந்ததென்று!
ஏழ்மை நிலை எனை வாட்ட,
ஏங்கிப் பார்க்கிறேன் கனவுகளில் கல்வியை!!
தேவைகளும் ஆசைகளும் எதிரெதிரே வீற்றிருக்க;
தேங்கிக் கிடக்கும் கவலையிலும்
ததும்ப நிற்கும் கண்ணீரிலும்
திக்கு தெரியாமல் தேடுகிறேன்...
தீவிரமாகத்தான் ... கல்வியை இல்லை...
தினக்கூலிக்கு "ஆள் தேவை" என்ற பலகையை!
சுமை தூக்கித் தருகிறேன்...பணம் வேண்டாம்
சற்று என் மனச் சுமை இறக்கித் தருவீரோ???