Saturday, June 25, 2011

கால் கிலோ கல்வி !!!

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்"

ஒரு தாயானவள் ( தந்தையும் கூட! ) தன் மகன் அறிவிற் சிறந்து, நற்குணங்கள் ததும்பப் பெற்று ஊரார் புகழும்படியாக இருக்கிறான் எனும்போது,அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சி அடைகிறாள் என்பது இத்திருக்குறளின் விளக்கம். இப்படி ஒரு புறம் இருக்க, இக்கால நடைமுறைக்கேற்ப குறளை மாற்றி அமைக்கலாம் எனவும் தோற்றுகின்றது.

"ஈன்ற பொழுதிற் துவங்கி காசிறைப்பாய்உன்மகனை
சான்றோன் எனக்கேட்கத் தான்"

குழந்தை பிறந்தது முதல் காசை வாரி இறைக்கத் தொடங்கிவிட்டால் போதும், அதனைப் பிற்காலத்தில் சான்றோனாக்கிப் பார்த்திட இயலும். இதில் சான்றோன் எனும் சொல்லை (கல்விச்) சான்றிதழ் + உடையோன் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்!
             
தமிழ்நாட்டில், அதிலும் சென்னையில் மட்டும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இவற்றைப் "பள்ளிக்கூட்டங்கள்"
எனச் சொல்வதிலும் தவறில்லை. "கல்விக்கண் திறந்த காமராசர்" போன்ற பலரின் முயற்சியால் மதிய உணவுத் திட்டங்களோடு கூடி, இலவசக் கல்வி தரப்பட்டு, கல்வித் தரம் உயர்த்தப்பட்டு கல்வி இன்றியமையாததாக உலா வந்தது அக்காலம். இப்போதும் கல்விக்கூடங்களுக்குக் குறைபாடில்லை. விளைவு, கோயம்பேடு சந்தையில் காய்கறிகளையும் பழங்களையும் கூர் போட்டு விற்பதைப் போன்று கல்வியையும் கூவிக் கூவி விற்கும் நிலைமை வந்துவிட்டது. இதற்கான விலை அட்டவணை பள்ளியைப் பொறுத்து மாறுபடுகிறது.
எல்.கே.ஜி. - ரூ. 1,750 முதல் - ரூ. 24,000 வரை
12 - ஆம் வகுப்பு - ரூ. 7,750 முதல் - ரூ. 23,350 வரை
இது அரசுப் பள்ளிகள் அல்லாமல் தனியார் பள்ளிகளின் நிலை. இப்படி கல்விக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டும் இதற்கு மேல் வசூலிக்கும் பள்ளிகளும் இதில் அடக்கம். இப்படியிருக்க, தனியார் பள்ளிகளுக்கு, தான் நிர்ணயிக்கும் தொகையை, அரசு தானே வசூலித்து அப்பள்ளிகளிடம் ஒப்படைக்கலாமே!
கல்வி வியாபாரமாகி வருவதற்கு முக்கியக் காரணம் மக்களாகிய நாமே! சற்று சிந்தித்துப் பார்ப்போம் ... எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஆரம்பத்தில் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவது தான் என்ன? அதே எண்சுவடியும், அ, ஆ, இ, ஈ யும், a, b, c, d யும் தான். ஆனால் இதற்காக மாறுபடும் விலை அட்டவணையைப் பாருங்கள்! “standard” எனப்படும் “தரம்” தான் இதற்குக் காரணம் என்று பொதுவாக மக்களிடையே கருத்து நிலவுகிறது. இது ஒரு வகையில் உண்மை எனக் கொண்டாலும், இது மட்டுமே உண்மை எனக் கொள்ள முடியாது.  "infrastructure" என்று சொல்லப்படும் "அடிப்படைக் கட்டுமான வசதிகள்" இத்தகைய பள்ளிகளில் பெரும்பான்மையில் நன்றாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இதில் சேர்க்க விரும்புகின்றனர் என்றும் சொல்லலாம். இவர்கள் கனவுகளுக்கும் கணிப்புகளுக்கும் ஏற்றவாறு அப்பள்ளிகள் இருக்கின்றனவா என்பது ஒரு சில இடங்களில் கேள்விக்குறியே!
சில பள்ளிகளில் மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் அடுத்த நிலைக்குத் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியின் தரக் குறைவுக்கு இதுவும் பங்கு சேர்க்கின்றது. மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆசிரியர்கள் பலர் இருந்தும், இதுபோன்ற ஒரு சில ஆசிரியர்களால் கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே கருதப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. தற்பொழுது "சமச்சீர் கல்வி " என்னும் பெயரில் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மாணவர்களின் அறிவைக் கூர்மையாக்கும் விதமாக எவ்வெவற்றைச் சேர்க்க வேண்டும் என்பதும், எத்தகைய பாடத்திட்டம் அமைய வேண்டும் என்பதும் போக, பள்ளிகளின் தரத்தையும் சற்று ஆராய்ந்தால் நன்மை விளையும் என்பது ஒரு சாராரின் கருத்து. பத்தாம் வகுப்பு வரை எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மக்களுக்கு, தம் பிள்ளைகளைப் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கும் பொழுதுதான் பீதி கிளம்புகிறது. தரமான பள்ளியின் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள், தனிப்பயிற்சி நிலையங்கள் என்று எண்ணிலடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றது இவர்களின் தேவை. அட! தேவைக்கேற்ற பள்ளி தான் கிட்டியாயிற்றே? இன்னும் என்ன? என்று மனம் நினைத்தாலும், புற உலகின் உந்துதலால் கையிலடங்காமல் செலவாகத் துடிக்கும் பணம். இதில் பெரும்பாலும் அவதிப்படுவோர் மாணவர்கள் மட்டுமே!
பொறியியல் படிப்பும் மருத்துவப் படிப்பும் ஒவ்வொரு புறம் கையசைத்து நிற்க இரண்டு வருடம் அல்லும் பகலும் ஆசையை அடையப் போராட்டம்!!! இதற்கு வணிகவியல் தொடர்பான படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் விதிவிலக்கு! இதனைத் தொடரும் CA, CS, CWA, B.COM போன்ற படிப்புகள் பலருக்குக் கண்ணிலே தெரிவதே இல்லை. பணம் நிறைய செலவழித்துப் படித்தால் தான் படிப்பு என்று இப்படிப்புகளை ஏளனமாகப் பார்த்துப் பழகிவிட்டார்கள் போலும்! உண்மையில் சொல்லப் போனால், இப்பொழுது இத்தகு படிப்புகளில் மட்டுமே கல்வியின் உயிரோட்டம் காணப்படுகிறது. மேலும் எப்படியோ.... தெரியவில்லை!
நாம் மீண்டும் அறிவியல் சார்ந்து வருவோம்!!! இப்படி பிள்ளைகள் படித்தும், பாதி நேரம் பயத்தில் உழலுவதே பெற்றோர் மனநிலை. அடுத்த கட்டமாக, அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள்; இதில் சிலர் நுழைவுத் தேர்வுகளுக்காக தங்களைப் பத்து அல்லது ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஆயத்தப் படுத்திக் கொள்கிறார்கள். இவ்வனைத்தையும் அசைத்துப் பார்க்க வருகிறது தேர்வு முடிவுகள். முட்டி மோதி முண்டியடித்து 200 -க்கு 199 , 198  என வாங்கினாலும் போதுவதில்லை. இதற்கிடையில், இறுதித் தேர்வுக்குப் பின்னர், ஆனால் தேர்வு முடிவுகளுக்கு முன்னர் என்று பதம் பார்க்கத் தொடங்குகின்றன தனியார் கல்லூரிகள்.... பேரம் பேச ஆரம்பிக்கின்றனர்: "Mechanical Engineering " 18 லட்சம் ,"EEE" 16 லட்சம் என்று! ஐயோ... பிள்ளை இவ்வளவு உழைத்தும் எதிர்ப்பார்த்த கல்லூரியில், எதிர்ப்பார்த்த படிப்பு கிடைக்கவில்லை என்றால் என்செய்வது? கூரையைப் பிய்த்துக் கொண்டு போகின்றது பணம்- தனியார் கல்லூரிகளின் காலடியில், அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு! இது ஒரு புறம்.
கலந்தாய்வுக்காகக் காத்திருக்கும் கனவான்கள் மறுபுறம். பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி ஒதுக்கப்படும் இடங்களினால் "பிற்படுத்தப்படுவோர்" பற்றி அரசும் இதுவரையில் கண்டுகொண்டதாக இல்லை!!! இதில் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் "OC " எனப்படும் "open category" பிரிவினரே! "middle class" என்று பெரும்பான்மையாகக் காணப்படும் இத்தகைய நடுத்தரவர்கத்தினர் அடையும் அல்லல்களுக்கு அளவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் "மதில் மேல் பூனை கதை". எதற்கும் கையாலாகாத நிலை!
இது பொறியியல் படிப்பின் நிலை. பின் வருகிறது மருத்துவப் படிப்பு. எடுத்த எடுப்பில் 45 லட்சம் என,ஒரே வாயில் ஏப்பம் விட! அட.... அசருவதில்லை நம் மக்கள். தட்டுமுட்டு சாமான்களை விற்று அல்லது தலையை அடகு வைத்தாவது உள்புகுந்துவிடுகிரார்கள். எல்லாம் "சான்றோன்" படுத்தும் பாடு. இவை அனைத்தும் அரசுக்குத் தெரிந்திருந்தும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. "தனியார் கல்லூரிகளின்அதிகக் கட்டண வசூல் விவரங்கள் பற்றி உரிய ஆவணங்கள் , ஆதாரத்தோடு இருந்தால் மக்கள் முறையிடலாம் ! அதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்", என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார் என்று நாளேட்டில் செய்திகள் மட்டும் தவறாது வெளியாகும். யார் முறையிடப் போகிறார்கள் என்று அவர்கள் கருதுவதும் சரிதானே? நமக்கேன் வீண்வம்பு என்று இருப்பவர்கள் தானே நாம்!!! கல்விக்கடன், நகைக்கடன் என்று பலவகையில் திணறினாலும் அரசின் தவற்றைத் தட்டிக் கேட்க மனம் வராத தியாகிகள் நாம்!
இதோ, இன்னும் பணத்தின் பயணம் ஓயவில்லை. நான்கு அல்லது ஐந்தாண்டு உள்நாட்டு பட்டப்படிப்பிற்குப் பிறகும், வெறிக்க வைக்கும் வெளிநாட்டு மேற்படிப்பு. இருக்கும் உடைமைகள் அனைத்தையும் காட்டித் தயாராகிறது ஆவணங்கள்....மேலும் 35 லட்சத்திற்கும் மேல் பணம் பறக்கின்றது. நீண்ட பெருமூச்சுடன் நிமிர நினைக்கும் நிலையில், திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் கண்ணைக் கட்டுகிறது. ஊழல் மிகுந்த சமுதாயம் என்று கோஷமிட்டுப் பயனில்லை. பிறகென்ன, இத்தனை வருடங்களாகக் கொட்டியிறைத்த பணத்தை எப்படி மீட்பது ??? இது நாள் வரை உருவாக்கிய மருத்துவர்களும் பொறியியலாளர்களும் தங்கள் கைவரிசையைக் காட்டத் துவங்குகின்றனர். தாங்கள் மக்களிடம் கறக்கும் பணத்திற்கு அவர்கள் தரும் பதில்.... அதே "தரம்" (standard) மற்றும் " அடிப்படைக் கட்டுமான வசதிகள்" (infrastructure)!!! சிறு வயதிலிருந்தே கற்பிக்கப் பட்டுள்ளதல்லவா...பசுமரத்தாணிபோல பதிந்து கிடக்கிறது நெஞ்சில்!
இதே நிலையில் சென்று கொண்டிருந்தால் "கல்வி" என்பது ஒரு நாளில் எட்டாக் கனியாகும் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. இத்தகைய நிலவரம் மேலும் தொடராமல் முளையிலேயே கிள்ளி விட மக்களாகிய நமக்கு முழு உரிமை உண்டு. ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு! ஒன்று திரண்டால் உண்டு முடிவு! சிந்திப்பீர்!!! செயல்படுவீர்!!!

2 comments:

  1. இன்று கல்வி கற்பதில் உள்ள பிரச்சனைகளை
    மிக ஆழமாக சிந்தித்து அழகாக விரிவான
    பதிவாக தந்துள்ளீர்கள்
    சமீபத்தில் இத்தைன் தெளிவான பதிவினை
    நான் பதிவுலகில் கண்டது இல்லை
    சிந்தனைகளை கிளறிச் செல்லும்
    சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா! தங்கள் ஆதரவோடும் ஆசீர்வாதங்களோடும் பதிவுகள் மேன்மேலும் தொடரும்.

    ReplyDelete