Friday, March 18, 2011

"போலாம்.... ரைட்! ரைட்!"

                   அன்று இரவு 9.30 மணி இருக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேர்ந்து, பேருந்திற்காகக் காத்திருந்த சமயத்தில் அந்தப் பேருந்து வந்து நின்றது.... 123 UD...திருச்சி செல்லும் வண்டி. முன் பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் சிலதே இருக்க, விருப்பப்பட்ட இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யக் காத்திருந்த பயணிகளில் நானும் சேர்த்தி! பொதுவாக இது போன்ற பேருந்துகளுக்கே உரித்தான மூட்டைப் பூச்சி, உடைந்த சாளரம், கயிற்றால் கட்டப்பட்ட முன் கதவு, பின் புறம் சற்றும் சாய்க்க  முடியாத இருக்கை, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டும் செயலற்றுக் கிடக்கும் தொலைக்காட்சிப் பெட்டி, அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்படுவது போன்ற மின் விசிறிகளும் விளக்குகளும் இதற்கு சற்றும் விதிவிலக்கல்ல!! ஈதனைத்திற்கும் இடையில் எனக்கென்று ஒரு இடத்தை அமைத்துக் கொண்டு, பயணம் செய்யத் தயாரானபோது, நடத்துனர் என்னை வெறித்து நோக்குவதை உணர்ந்தேன். அவர் என்னிடம் பேச முற்பட்டார். பயணச் சீட்டிற்காகவோ என்றெண்ணி நான் அவரை நோக்க, அந்தப் பார்வையே கடும் சினமுடன் கூடியதாக மாற எனக்கு சிறிதும் நேரம் பிடிக்கவில்லை. காரணம், அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் அப்படி! "சிங்கிளா (single)  வந்தா சீட்டு கிடையாதும்மா !",என்று அவர் சொல்லியது தான் தாமதம், பொறிந்து தள்ளிவிட்டேன். பணம் இருப்பின் பயணம் செய்யலாம் என்றது போக, இப்பொழுது இது போன்ற நியதிகள் உட்சேருவதன் நோக்கம் தான் என்ன என்று சிறிதும் புரியவில்லை!!
 அரசுப் பேருந்தில் இது போன்ற விஷயங்கள் சர்வ சாதாரணமாக ஆகிக் கொண்டு வருகின்றன. இப்படி இருக்க, முன்னரே, "சிங்கிளா வருபவருக்கு சீட்டு கிடையாது", என்று ஒரு அறிவிப்புப் பலகை வைத்திருக்கலாமே! வருபவர் எல்லாம் துணையுடன் தான் வரவேண்டும் என்பது எவ்வளவு அற்பமாக இருக்கிறது ? ஏறும் முன்பு, தனியே வருபவர் எவராயினும் "நான் தனியாகப் பயணம் செய்ய உள்ளேன். உடன் வருபவர் வரலாம்!", என்று கூட்டு சேர்த்துக்  கொள்ள வேண்டும் போலிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் முகப் புத்தகத்தில் ( FACE BOOK ) இருப்பது போன்று "committed","in a relationship","engaged to" என்று ஒரு அடையாள அட்டையுடன் மட்டுமே தனியே செல்ல இயலும்!!
                 மேலும், பெண்கள் தனியே பயணம் செய்கிறார்களே என்பதால் உரைக்கப் பட்டதன்று இது! தனியே வரும் அந்தப் பெண்ணின் அடுத்திருக்கும் இருக்கையில் யாரை அமர வைப்பது என்பதும், இல்லையேல் ஒரு சீட்டிற்கான பணம் போய்விடுமே என்பதுமே இவர்களின் முக்கியக் கவலையாக உள்ளது!!! இந்த அளவிற்கு யோசிக்கும் இவர்கள், சில நேரங்களில் பேருந்தில் நான்கு இருக்கைகள் மட்டுமே இருக்கும் கடைசி வரிசையில் ஐந்தாவதாவதாக ஒருவரை ஏற்றவும்   சற்றும் தயங்குவதில்லை.கொடுமையிலும் கொடுமை, அதற்கும் முழுக் கட்டணம்; ஆனால் அளிக்கப்படும் இருக்கையோ மத்தியில் இருக்கும் பெட்டி....உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டும் அது கிட்டினால்....! சாதாரண குண்டு குழிகளுக்கே ஆட்டம் கண்டுவிடும் நம் ஊர் பேருந்துகளில் இத்தகைய இருக்கையில் (மன்னிக்கவும்... நான் அந்தப்  பெட்டியை இருக்கை என்றே பெயரிடும்படி ஆகிவிட்டது!) அமர்ந்தால் கண்ணிமைக்கும் நொடியில் நாம் கடைசி வரிசையிலிருந்து முதல் வரிசைக்கு வருவது என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை! இதற்கும் மேலாக, குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது! ஒரு வேளை  அனைத்து இருக்கைகளுக்கும் ஆட்கள் இருந்தாலும், நம் நடத்துனர் திருப்தி அடைவதாக இல்லை. ஆசை யாரை விட்டது! இப்போது இவர் தரப்போகும் இடமோ  நான் முன்னர் குறிப்பிட்ட பெட்டிக்கும்  மேலானது என்பதைக் கருத்தில் கொள்ளவும். பேருந்தில் ஓட்டுநரின் பின்புறம் ஒரு சிறு காலி இடம் இருப்பதைப் பலர் கவனித்து இருக்கலாம். அதில் வண்டியை சுத்தம் செய்பவரோ அல்லது நடத்துனரோ அவ்வப் பொழுது உறங்குவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். சமயத்தில் இவர்கள் இந்த இடத்தையும் தியாகம் செய்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர்களின் தியாக மனப்பான்மை தான் என்னே!!! "இதுவும் கடந்து போகும்!" என்பதற்கிணங்க, இவர்கள் சில நேரங்களில் பாரி வள்ளலாவதும் உண்டு. அத்தகு தருணத்தில், பேருந்தில் நடப்பதற்கென்று ஒதுக்கப்பட்ட தடத்தில் குறைந்தபட்சம் நான்கு பேருக்காவது இடம் கொடுக்கிறார்கள் .... அதுவும் அதே முழுக் கட்டணத்தில்!!!    ஒரு சில வண்டிகளில் இதே நடத்துனர்கள் மருத்துவராகவும் உருக்கொள்கிறார்கள். மூட்டைப் பூச்சித் தொல்லை தாங்க முடியாமல் நீங்கள் சென்று புகார் கொடுத்தால், அவர் பூச்சிக்கடிக்கு மருந்து கூட பரிந்துரைக்கிறார்!! 
                     சரி ... இதைச் சிறிது நேரம் விட்டுவிட்டு, இரவு நேரங்களில் உணவுக்காகப் பேருந்தை நிறுத்தும் இடத்தின் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.  ஒரே பார்வையில் அருவருப்பைத் தூண்டும் அளவுக்கு இருக்கும் இவ்விடங்கள் ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் மட்டும் எப்படி புனிதமான இடங்களாகக் காட்சியளிக்கின்றனவோ தெரியவில்லை! போகட்டும், இங்கு இருக்கும் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் அதற்கான அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் இரண்டு அல்லது மூன்று ரூபாய் கூடுதலாகவே வைத்து விற்கப்படுகின்றன; அதன் தரத்திற்கும் உத்திரவாதம் இல்லை. இது எந்த விதத்தில் நியாயம்? இதனை எதிர்த்துக் கேட்பாரும் எவருமிலர். காரணம், அப்பொழுதிற்கு அவர்களுடைய தேவையாக இருப்பது, பசியைப் போக்குவதற்கென ஏதேனும் ஒரு பண்டம். இதற்காக சற்றுக் கூடுதலாக செலவழிக்க எவரும் தயங்குவதில்லை. நடுநிசியில் கடையைத் திறந்து வைப்பதால் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்; இங்கிருக்கும் கட்டணக் கழிப்பிடங்களை மட்டுமாவது சுத்தமாகப் பராமரிக்க வேண்டாமா? பேருந்தினுள் அமர்ந்திருக்கும்போதே நாற்றம் குடலைப் புரட்டுகிறது! ஏன்? அரசு இவையனைத்தையும் ஏற்று நடத்தக் கூடாதா? இதிலும் சற்று தலையிட்டால் தான் என்ன? இதன் மூலம் அரசு வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது மட்டுமில்லாமல், தனக்கென்று ஒரு கணிசமானத் தொகையையும் ஈட்டக் கூடும்!
                              சொகுசுப் பேருந்து என்ற பெயரில் சொக்க வைக்கும் இவர்கள் சொகுசு என்று கருதுவது மேற்கூறியவைகளைத்தானா? மக்களே! சிந்திப்பீர்!! ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுக்காரர்களும் இருந்தே தீருவார்கள்! "தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்!". எனவே, தயைக்கூர்ந்து உங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெறுங்கள்! குரல் கொடுக்கத் துவங்குங்கள் ; குற்றங்களும் குறையத் தொடங்கும்! தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ள இத்தருணத்தில், அமையப் போகும் அரசு இதுபோன்ற இடர்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதும் மீண்டும் கேள்விக்குறியாக்குவதும் உங்கள் கையில்! உங்களது தேவை பேரின்பமா பேரிடரா என்று நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள்!!!   
        

No comments:

Post a Comment