"அலைபாயும் எண்ணங்களுக்கிடையில் அவ்வப்பொழுது "நான் யார்?" என்ற கேள்விக்கு பதில் தெரியாமல், விடைத்தாளின் பக்கங்களை நிரப்ப மாணவன் மேற்கொள்ளும் முறையைப் போல....இதோ! குவிந்து கிடக்கின்றன என் முன் பல விதமான.... பற்பல விடைகள்... என்னை எனக்கே அறிமுகப்படுத்திக் கொண்டு!!! இருந்தும் ஒப்புக் கொள்ள மறுக்கின்றது என் சுயமாகிய, "நான்"... புறக்கணிக்கத் தொடங்குகிறது.... ஒரு புரட்சியாளனாக! ஒரு சமூக ஆர்வலனாக! இல்லை...இல்லை... முதலில் ஒரு சராசரி மனிதனாக...! ஆம்! என்னை யாரென்று கண்டுகொள்ள முடியாத வகையில் நான் செய்துவரும் செயலனைத்தும் மனத்தின் வாயிலாக, மர்மமான முறையில் ஏளனப் பேச்சு பேசி என்னை எள்ளி நகையாடுகிறது. ஒருவேளை, வெளிப்பார்வையின் மொத்த பரிணாமங்களின் கூட்டமைப்பே நானோ? இருக்காது....! அப்படியென்றால் எனக்குள் இருக்கும் தனித்துவம் தான் என்ன? யோசிக்கிறேன்...ஏய் ...நீ இன்ன பதவியில் இன்ன இடத்தில் இருப்பவன் தானே?... அவ்வாறாக மற்றவர்கள் அல்லவோ என்னை அழைக்கிறார்கள்? சரி, நீ இன்னாருடைய புதல்வன்/புதல்வி ... இதிலென்ன தெரிகிறது என் தனித்தன்மை? பொருளின் இருப்பளவைக் கொண்டு சொல்லலாமோ? இதற்கு மட்டும் என்ன... தனிப்பெருந்தகைமையா இருந்துவிடப் போகிறது? "நான் கடவுள்???".... மனிதர்கள் அனைவரும் கடவுளாகிவிட்டால்... கலக்கம் ஏதங்கே நாட்டில்? பகுத்தறிதலின் பொருட்டு பகுக்க இயலாத பரந்தாமனைப் பங்கு போட முயற்சியோ? உணர்தலின் பொருட்டு கடவுள் "உடன்" இருப்பாரன்றி, "உள்" இருப்பாரல்லர்! பிறகு....வேறென்ன தேவை, என்னை "நானாக" உருப்பெறவைக்க?
இருபதில் இருக்கும் எனக்கு, என்னுள் இருப்பது என்னவென்று அறிய வழியதுவோ யாண்டுமே புலப்படக் காணோம்! பின், நான் என்ன தான் சாதித்திருக்கிறேன் இத்துனை வருடங்களாக? பெற்றோர்கள் மீது பழியைப் போட்டுத் தப்ப முடியுமா என் மனசாட்சியால்? ஒரு காலமும் அது நடக்க வாய்ப்பில்லை. நான் பூமியில் பிறந்தது முதல், என் ஒவ்வொரு அசைவினிலும் ஆனந்தம் காண்பவர்களாயிற்றே அவர்கள்! பிஞ்சுக் கரங்களைப் பற்றி நடக்கப் பழக்கியும், மழலைச் சொல் மணத்தில் மயங்கியும், உரிமையாய் அரற்றுவதில் அகமகிழ்ந்தும், என்னுடைய ஒவ்வொரு அசைவிற்கும் புதுப்புது அர்த்தங்களைத் தோற்றுவித்துக் கொண்டு, இன்னும் என் பின்னால் அவர்கள்!!
ஒரு சராசரி மனிதனாக என்னிடம் நான் எதிர்ப்பார்க்கக் கூடியது தான் என்ன? தேடிப் பெற்ற பதில்களின் பட்டியல்... இதோ!
* சொல் பேச்சு கேட்கும் பிள்ளையாக,
* சுயநலமற்ற பிறவியாக,
* பிறர் நலம் காக்கும் ஆத்மாவாக,
* அன்பு, பாசம் முதலியவற்றின் வெளிப்பாடாக,
* நற்குணங்களின் கூட்டமைப்பாக,
இருக்க, சாதிக்க நினைக்கும் என்னுள் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் மெல்ல வெளிவரத் தொடங்குகின்றன ஆசைகளாக!!!
ஆம்! கண்டுகொண்டேன்... ஆசைகளற்ற மனிதன் உண்டோ உலகில்? இதனால், தேடி அலைகிறேன் இன்றும், இன்பத்தின் வாயில்கள் எங்கென்று, கண்முன் எப்போதும் அவை திறந்திருந்தும்!! கற்பிக்க நினைக்கிறேன் நான் ஏதும் கற்றுக் கொள்ளாமல்! வாழ நினைக்கிறேன் வாழும் முறையறியாமல்! தற்போதைய மகிழ்ச்சிக்காகத் ததும்பி நிற்கும் என் திறமைகளுக்குத் திறையிடுகின்றேன்! உணர்ச்சியற்ற நிலையை உணர்கிறேன்! செயலாக்கம் பெறத் துடிக்கிறேன்.... வெறும் மனதளவில்!! சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்...."
இவ்வாறெல்லாம் தோன்றுவது எப்பொழுது? மனிதன் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் ஏதேனும் ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். பொருள் உள்ளவனுக்கு அதனைப் பாதுகாப்பதைப் பற்றிய சிந்தனை! பொருளற்றவனுக்கோ அடுத்த வேளையைப் பற்றிய சிந்தனை! தன்னைச் சூழ்ந்து இருக்கும் இன்பங்களை விடுத்து, மனநிறைவைப் பெற, பற்பல வகையில் அலைந்து திரியும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இயந்திரமயமாகிவரும் இவ்வுலகில் நாம் அனைவரும் மேலே குறிப்பிட்டுள்ள நிலையை அடைவதென்பது தொலைவில் இல்லை.
விடியற் காலையின் வியப்புறும் அழகோடு, சேவல் கூவி; பொழுது புலர்ந்து, வாசலில் பூக்கோலமிட்டு, கடவுளைத் தொழுது, விறகடுப்பில் உணவு சமைத்து, சுறுசுறுப்புடன் அனைத்து வேலைகளையும் முடித்து, அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் நலம் விசாரித்து, பகைமை பாராட்டாமல் பாரம்பரியம் காத்த நம் முன்னோர்கள் எங்கே? காலைப் பொழுதைக் கண்ணாலும் பார்த்திராத, கைப்பேசியின் சிணுங்கலில் சிற்றுண்டியையும், இணைய தளங்கள் மற்றும் வலைப்பூவின் வாயிலாக உடனிருப்பவருடனே அளவளாவி, இதற்கிடையே தப்பித் தவறி கண்கள் உலகத்தின் இயற்கை இயக்கத்தைக் கண்டுவிட்டால் அதனை ஒரு அபூர்வ அதிசயமாகக் கண்டு பூரிப்பில் ஆழ்ந்து, உறவுகளைத் தொலைத்து, உலக மாயையில் சிக்கி, முப்பதிலேயே முற்றுமிழந்து உவகைத் தேனைத் தேடி அலைந்து, ஆங்காங்கே காணப்படும் மன வளர்ச்சிக் கூடங்களிலும், ஆன்மீக போதனைப் பீடங்களிலும், மருத்துவமனையின் வாயிலிலும் தன்னையே தேடிடும் இக்கால மாந்தரின் நிலை எங்கே?
சிறியதொரு வாழ்க்கை! இதில் பணத்தின் பிடியில் பகடைக்காயாய்ச் சுழன்று திரிகிறோம். உணர்ந்து கொள்ள வேண்டியது ஒன்றே! வாழ்வில் நன்மையோ தீமையோ, பிறர் தர வருவதில்லை. நாம் இழைக்கும் செயல்களே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. எந்த நிலையில் நாம் நம் வாழ்வைத் திரும்பிப் பார்த்தாலும் அங்கே நம்மை அடையாளம் காட்டிக் கொண்டு, "நான் யார்?" என்று அறிவுறுத்துவது நாம் அகமகிழ்ந்து பிறருக்குச் செய்த உதவி மட்டுமே! இருக்கும் வரையில் இருப்பவருடன் இணைந்து இன்புற்று வாழ்ந்தால் இடுக்கண் ஏது? "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றான பின், "நான்" என்பது மறைந்து, "நாமாகிப்" போகுமன்றோ???